’அன்புமணியால் கொதித்துப் போன ராமதாஸ்...’ தண்ணி காட்டிய முரசொலி..!

By Thiraviaraj RMFirst Published Feb 26, 2019, 12:43 PM IST
Highlights

சந்தனத்தை பூசுவதாக நினைத்து சாக்கடையை பூசிக் கொள்வது சாணக்கியத்தனம் அல்ல என அன்புமணியை முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. 

சந்தனத்தை பூசுவதாக நினைத்து சாக்கடையை பூசிக் கொள்வது சாணக்கியத்தனம் அல்ல என அன்புமணியை முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என விளக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. இதனை விமர்சித்து முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘’கோ.க.மணி, மூர்த்தி, பாலு, வினோபா போன்ற படைவரிசைகளைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்! பாவம்: அன்புமணி! அவரை செய்தியாளர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தபோது, பதில் சொல்ல இயலாது அவர் தவித்து, பல கேள்விகளைத் தவிர்த்து நழுவியபோது, அதனை நேரலை ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் பார்த்த மருத்துவர் ராமதாஸ் கொதித்துப் போயிருப்பார் என்றே எண்ணுகிறோம்!

 

செய்தியாளர் சந்திப்பு மேடையில் சின்ன அய்யாவைச் செய்தியாளர்கள் கேள்விகளிலிருந்து காப்பாற்ற கோ.க.மணி அவர்கள் பட்டபாடு இருக்கிறதே; அதுவே கண் கொள்ளாக் காட்சியாக விளங்கியது! சின்ன அய்யா கேள்வியை எதிர்கொள்ளத் திணறியபோது, `பந்தை அடிக்காது, ஆளை அடிப்பது’ எனும் போக்கில், `அவருடைய மைக்கைப் பிடுங்குங்கள் - அந்த மைக்கை `ஆஃப்’ செய்யுங்கள்’ என ஆத்திரத்தின் உச்சகட்டத்தை அன்புமணி எட்டியபோது, அதைத் தவிர்த்திட மணி அவர்கள் சின்ன அய்யாவைக் காப்பாற்ற வேறு ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விப் பக்கம் திசை திருப்பி விட்டிருக்காவிடில் சின்ன அய்யாவின் கதை அங்கு கந்தலாகியிருக்கும்! 

‘சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொண்டது சாணக்கியத்தனமல்ல என்பதை அன்புமணி ராமதாஸ் புரிந்து கொள்வார்!’

முரசொலி கட்டுரை. pic.twitter.com/AI8Sva4UJ4

— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam)

 

செய்தியாளர்கள் சந்திப்பில் மற்றொரு சுவையான நிகழ்ச்சி நினைவுகூரத்தக்கது! செய்தியாளர்கள் அனைவரும் அன்புமணி மற்றும், அவரது அப்பாவின் முந்தைய பேச்சுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி, அவருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கையில், அன்புமணியோ, என்ன செய்வது என்று புரியாமல்,`அவருக்குத் தண்ணி கொடுங்க... இவருக்கு கொஞ்சம்தண்ணி கொடுங்க’எனக் கூறிக் கொண்டிருந்த காட்சிகள், தன்னை அறிவு ஜீவியாகத் தானே பாவித்துக்கொண்டு, மற்ற இயக்கத்தினரைத் தரக்குறைவாக, விமர்சித்துக் கொண்டிருந்த அன்புமணி அரைவேக்காட்டு அரசியல்வாதிதான் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டிருந்தது!’’ என விமர்சித்துள்ளது. 

click me!