
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொது நல மனு
மூத்த வக்கீலான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில், குற்ற வழக்குகளில் தண்டனை அடையும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்கா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
வாழ்நாள் தடை
அப்போது, ‘‘குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர்?. அவர்கள் தொடர்பான புள்ளி விவரங்கள், இந்த விவகாரத்தில் புதிய பரிமாணத்தை தரும்’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்பதை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
1581 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது-
‘‘கடந்த 2014-ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, குற்றப் பின்னணி கொண்ட 1581 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டு உள்ளது?.
சிறப்பு நீதிமன்றங்கள்
அவர்கள் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கு விரைவு நீதிமன்றங்களைப் போல் தனி நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
அரசியலில் இருந்து கிரிமினல்கள் அகற்றப்பட வேண்டும். எனவே இதுபோன்ற தனி நீதிமன்றங்கள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும்? என்பதை மத்திய அரசு கணக்கிட வேண்டும்.
6 வாரங்கள் கெடு
மேற்கண்ட விவரங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’’.
இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை; மத்திய அரசு பரிசீலனை
கிரிமினல் வழக்குகளில் தண்டனை அடைந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போது 6 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு ஆயுள்காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இந்த வழக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு தரப்பு வாதத்தின்போது இந்த பரிந்துரை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் கடந்த ஜூலை 12-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வாழ்நாள் தடை விதிக்கும் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடுகிறவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அந்த பொது நல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.