
எடப்பாடி அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், டிடிவி அணியினர் ஆட்சியை கவிழ்க்க நினைக்க மாட்டார்கள் என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார்.
தமிழக அரசியல் சூழ்நிலையில் தற்போது பரபரப்பின் உச்சத்தை எட்டி வருகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பால் பெரிதும் கலக்கமுற்றது டிடிவி தரப்பு.
டிடிவிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவதாக அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று வரை டிடிவிக்கு 23 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில், அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுகவினர், ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் குறுக்கு வழியில் திமுக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் டிடிவி அணியினர் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்க மாட்டார்கள் என்றும் தம்பிதுரை கூறினார்.