
ஒரு சிலரின் நிம்மதியை விட ஒன்றரை கோடி தொண்டர்களின் நிம்மதி தான் முக்கியம் எனவும் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை எனவும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது. காரணம் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் மக்கள் கண்ணிலேயே காட்டப்படாமல் வைத்திருந்தது தான்.
முழுக்க முழுக்க சசி கண்காணிப்பிலேயே இருந்த ஜெ திடீரென இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அத்தனை கோபத்தையும் சசியிடம் வெளிக்காட்டினர்.
ஒரு வருடத்திற்கு பிறகு நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரமும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெ.சிகிச்சை பெற்று வந்த வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை வெளியிட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், ஒரு சிலரின் நிம்மதியை விட ஒன்றரை கோடி தொண்டர்களின் நிம்மதி தான் முக்கியம் எனவும் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியினரால் வெளியிடப்பட்ட மோசமான துண்டுபிரசுரங்களை பார்த்த பிறகே கொதித்தெழுந்த வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டுள்ளார் எனவும் இதற்கும் டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கு சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ஜெ மரணத்திற்கு காரணம் சசி குடும்பம்தான் என ஒரு வருடத்திற்கு முன்னால் சொன்னால் பொறுத்து கொள்ளலாம் எனவும் ஒரு வருடத்திற்கு பின்பும் அதையே கூறினால் எப்படி பொறுத்து கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஜெவுடன் பழகிய பழக்கத்திற்காக நாங்கள் பொறுத்து கொள்ளலாம் என்றும் எங்களுடன் இருப்பவர்கள் எப்படி பொறுத்து கொள்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.