கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்... அசைக்க முடியாத நம்பிக்கையில் திமுக கூட்டணி கட்சி..!

By Asianet TamilFirst Published Feb 2, 2021, 9:15 PM IST
Highlights

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட இந்தமுறை கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன என்று திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. 
 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் பட்ஜெட் முழுக்க பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. பெரு முதலாளிகளின் செல்வத்தை மேலும் உயரவைப்பதற்கான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டங்களும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவே உள்ளது.
மாநிலங்களுக்கு எந்தப் பங்களிப்பும் வராத செஸ் வரியை விதித்துள்ளது. இது, மாநிலங்களை வலுவிழக்கச் செய்யும் செயல் ஆகும். செஸ் வரி விதிப்பால் விலைவாசி மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 வழிச் சாலைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், பட்ஜெட்டில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியிருப்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் ஆகும்.
நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜகவின் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறக் கூடாது, மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதுபோல செயல்பட்டு வருகிறார். பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆளுநர் எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், சட்டபேரவை உரையிலும் எதையும் அவர் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
திமுக கூட்டணியில்தான் மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட இந்தமுறை கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட பூமி தமிழகம் ஆகும். ஆனால், அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, இழந்த மாநில உரிமைகளை மீட்க வேண்டும், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் திரும்ப வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் அமையும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் கட்சியினர் உற்சாகமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் சமூக நீதி தழைக்கவும், மாநில உரிமைகள் நிலைநாட்டவும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்கான ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் கட்சியினருக்கு வழங்கப்பட்டன” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

click me!