
அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறு பக்கம் பன்னீரை கழற்றி விட எடப்பாடி திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பன்னீர் செல்வத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை மோடி நம்புகிறார். ஆனாலும் பன்னீரை நம்பி பெரிய அளவில் எம்.எல்.ஏ க்களும், மாவட்ட செயலாளர்களும் வரவில்லை என்பதையும் அவர் கணக்கில் கொண்டுள்ளார்.
எம்.எல்.ஏ க்களை பொறுத்தவரை, எஞ்சிய நான்காண்டு காலமும் ஆட்சியிலும், பதவியிலும் சிக்கல் இல்லாமல் தொடர வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர். எனவே, ஆட்சி எந்த பக்கமோ, எம்.எல்.ஏ க்களும் அந்தப்பக்கம் என்பதுதான் நிலை.
இந்த நிலையில், பன்னீரை திரும்பவும் முதல்வராக கொண்டு வந்தால், அதிமுக ஆட்சி, மோடியின் கைப்பாவை ஆட்சி என்பது தெளிவாக வெளியில் தெரிந்து, அது பாஜகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
மேலும், பன்னீர்செல்வத்தை விட அதிக அளவில் குனிவதற்கும் எடப்பாடி தயாராக இருக்கிறார். அதனால், எடப்பாடியே, முதல்வராக தொடரட்டும் என்ற மனநிலைக்கு மோடி வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.
அத்துடன், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழத்தில் பாஜகவுக்கு ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள 20 தொகுதிகளையும், சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளை தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ள எடப்பாடி, அந்த தொகுதிகளின் பட்டியலோடு, பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்.
மோடியுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள ஆளுநர் ஒருவர், தேர்தலின்போது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியலோடு சென்று சந்தித்து, மோடியின் மனம் குளிருமாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் எடப்பாடிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
மோடி-எடப்பாடி சந்திப்புக்கு பின்னரும், பன்னீரை, தனியாக மோடி சந்தித்து பேச அழைத்தால், இந்த திட்டத்தில் ஏதாவது மாற்றம் இருக்கலாம். அப்படி இல்லையெனில், பன்னீர் முதல்வர் ஆக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.