
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றால் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அதில் பேசிய பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது.
மக்களின் எதிர்பார்ப்பு:
மக்கள் இலவசங்களையும் சலுகைகளையும் விரும்பவில்லை. நேர்மையான நிர்வாகத்தைத்தான் விரும்புகிறார்கள். எனவே மத்திய பட்ஜெட்டில் சலுகைகள், இலவசங்கள் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய பட்ஜெட்டை தயாரித்து வருகிறார். அதில் எனது தலையீடு எதுவும் இல்லை.
விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும்:
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை மத்திய அரசின் வெற்றிக்கு உதாரணங்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் தேவையான மாற்றங்களை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
நாட்டில் விவசாயிகளுக்கு பிரச்னைகள் இருப்பது உண்மைதான். மாநில அரசுகளுடன் இணைந்து அதனைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா:
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதற்கு அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது என்று அர்த்தமல்ல. காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல், ஊழல், சாதியவாத அரசியல் உள்ளிட்ட காங்கிரஸ் கலாசாரத்தை ஒழிப்பதுதான்.
காங்கிரஸ் கட்சியின் முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியையும், இப்போதைய பாஜக ஆட்சியையும் ஒப்பிட்டு மக்கள் எங்கள் அரசின் சாதனைகளைப் புரிந்து கொள்வார்கள் என பிரதமர் மோடி பேசினார்.