மக்கள் சாகையில குத்தாட்டம் போடுறார் அமைச்சர்! சொந்தக் கட்சிக்கே குழி தோண்டுறார்: கருப்பணனை கண்டபடி திட்டும் தோப்பு எம்.எல்.ஏ.

By Vishnu PriyaFirst Published Jan 25, 2020, 5:42 PM IST
Highlights

தமிழக காங்கிரஸில் மட்டுமில்லை அம்மாம் பெரிய அ.தி.மு.க.விலும் கோஷ்டி பஞ்சாயத்துகள் காட்டுத்தனமாக உண்டு என்பதை நிரூபிக்கும் வி.ஐ.பி.க்கள் இருவர்தான். அவர்கள்....தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம். 
 

தமிழக காங்கிரஸில் மட்டுமில்லை அம்மாம் பெரிய அ.தி.மு.க.விலும் கோஷ்டி பஞ்சாயத்துகள் காட்டுத்தனமாக உண்டு என்பதை நிரூபிக்கும் வி.ஐ.பி.க்கள் இருவர்தான். அவர்கள்....தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம். 

இருவரும் எலியும் பூனையும் மட்டுமல்ல அதையும் தாண்டி தாறுமாறாக மோதிக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. அது இன்னாதான் ப்ராப்ளம்னே தெரியலை, கடந்த ஒரு வாரமாக  அமைச்சரை வெச்சு செய்து கொண்டிருக்கிறார்  எம்.எல்.ஏ. தோப்பு.  அதுவும் சாதாரண வார்த்தைகளில் அபிஷேகம் இல்லை, செம்ம ஸ்ட்ராங்கான வார்த்தைகளில் அரச்சனை செய்து அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் மனிதர். 

அரசியல் புலனாய்வு வார இதழ் ஒன்றுக்கு காரசாரமாக பேட்டி கொடுத்திருக்கும் எம்.எல்.ஏ. அதில் “அம்மாவோட உண்மையான விசுவாசியாக இருந்து நான்  என் பணிகளை கவனிக்கிறேன். ஆன என் மேலே இருக்கிற கடுப்புல, என் தொகுதிக்கு நல்ல திட்டங்கள் வர விடாமல் மக்களை வஞ்சிக்கிறார் அமைச்சர். கட்சியை ஒழிச்சுக் கட்டுறார். பொறுப்பேயில்லாமல் ஆணவச்செருக்கோடு ருத்ரதாண்டவமாடுறார். அடுத்த பொதுத்தேர்தலில் தன்னைத் தவிர யாருமே இந்த மாவட்டத்தில் ஜெயிக்க கூடாதுங்கிற எண்ணத்தில் சொந்தக் கட்சிக்கே குழி பறிக்கிறார். 

கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட அமைச்சரின் ஆதரவாளருங்க, அவரோட தூண்டுதலில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கினாங்க. இந்த நபர்களின் வெற்றிக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரிக் கொட்டினார். எதுக்காக? தன்னை அமைச்சராக்கி அழகு பார்க்கும் சொந்தக் கட்சியான அ.தி.மு.க. தோற்கணும் அப்படிங்கிறதுக்காக. ஆனாலும் அவரோட சதிகளை முறியடிச்சு, பெருந்துறை  யூனியனை அ.தி.மு.க.வை கைப்பற்ற வெச்சிருக்கேன். அனால் புறநகர் மாவட்டத்தில் ஏழு யூனியனை எதிர்க்கட்சிக்கு தாரை வார்த்திட்டார் அமைச்சர். எல்லாம் அவருடைய மமதையே காரணம். 

தனக்கு சோறு போடும் கட்சியின் கழுத்தை அறுப்பதுதான் அமைச்சர் கருப்பணனின் கழக விசுவாசமா? யாரையும் மதிக்காமல் நடக்கும் அவரால் ஈரோடு புறநகர் அ.தி.மு.க.வில் பெரும் அக்கிரமங்களைச் சந்திக்கிறோம். நிரந்தர மந்திரியாக தன்னை நினைத்துக் கொண்டு செயல்படும் கருப்பணனின் முகத்திரையை பெருந்துறை அ.தி.மு.க. கிழித்துவிட்டது இந்த உள்ளாட்சி தேர்தலில். 

பெருந்துறையில் சிப்காட் மாசுகளினால் அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மக்கள் கேன்சர் நோயால் தினம் தினம் செத்துப் பொழைக்கிறாங்க. இந்த மாவட்ட அமைச்சர், அதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கையிலும் வைத்திருக்கும் கருப்பணனோ இதையெல்லாம் சீர் செய்யும் பொறுப்பே இல்லாமல், கேவலம் குத்தாட்டம் போடும் மந்திரியாக இருக்கிறார். 

இவரை அம்மாவின் ஆன்மா என்றைக்குமே மன்னிக்காது.” என்று வெளுத்திருக்கிறார். 

இதற்குப் பதில் கூறியிருக்கும் அமைச்சர் கருப்பணன் “அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி என்பதெல்லாம் முள் கிரீடமே தவிர சொகுசு இல்லை. என் மீது பொறாமையின் அடிப்படையில் பேசும் தோப்பு வெங்கட்சாசலத்தை என்னன்னு சொல்ல?

எனக்கு ஆணவம் பண்ணவும் தெரியாது, ருத்ரதாண்டவம் ஆடவும் தெரியாது. இதையெல்லாம் கூட சகிச்சுக்குவேன். ஆனால் சொந்தக் கட்சிக்கே குழி பறித்தேன்னு அவர் சொல்கிற பொய்யைத்தான் ஜீரணிக்க முடியலை. பெருந்துறை தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களை அவர்தான் பரிந்துரைச்சாருங்க. இதுல என்னோட கை எப்படி இருக்க முடியும்? சுயேட்சை நபர்களின் வெற்றிக்காக கோடிக்கணக்கில் செலவழிச்சேன்னு சொல்றார். இந்த பொய்யை நிரூபிக்க முடியுமா அவரால்? அம்மாவின் ஆன்மாவுக்கும், முதல்வருக்கும் முழு விசுவாசியாக நடக்கிறேன்.” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

இந்த இரு வி.ஐ.பி.களுக்கு இடையிலான மோதல் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ?! என்பதே தொண்டர்களின் கவலை. 
 

click me!