அதிகாரிகளை மதிக்கும் மு.க.ஸ்டாலின்.... புறக்கணிக்கும் அமைச்சர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 15, 2021, 4:36 PM IST
Highlights

அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அதேவேளை அதிகாரிகளை அமைச்சர்கள் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 

அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அதேவேளை அதிகாரிகளை அமைச்சர்கள் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்த திமுக அமைச்சர்கள் பரமக்குடி தொகுதியை புறக்கணித்து சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் வந்த அதிமுக அரசு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இதனையடுத்து இத்திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் பரமக்குடி வழியாக முதுகுளத்தூர் தொகுதி சென்றனர்.

1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பரமக்குடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு இருபது ஆண்டுகளுக்கு பிறகு பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் இப்போது திமுக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பரமக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்களுக்கு மாவட்ட எல்லையான காந்தி நகரில் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் காந்தி நகரில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஆய்வை புறக்கணித்து நேரடியாக முதுகுளத்தூர் தொகுதிக்கு சென்றுவிட்டனர். பரமக்குடியில் ஆய்வு செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதிகாரிகள் தயார் நிலையில் இருந்த நிலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்யாமல் பரமக்குடியை புறக்கணித்து சென்றனர்.

பரமக்குடியில் அமைச்சர்கள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள் என்பதால் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால் அமைச்சர்கள் பரமக்குடி நிகழ்ச்சியை புறக்கணித்ததால் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரமக்குடி பயணியர் விடுதியில் தங்கியிருந்த அமைச்சர்களை சந்திக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டமாக அமைச்சர்களை சந்தித்தனர்.

போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்தத் தொகுதி முதுகுளத்தூர் என்பதால் பரமக்குடியை புறக்கணித்துவிட்டு முதுகுளத்தூர் தொகுதிக்கு அமைச்சர்களை அழைத்து சென்றதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பரமக்குடி தொகுதியை புறக்கணித்து முதுகுளத்தூர் தொகுதிக்கு அமைச்சர்கள் சென்றதால் பரமக்குடியில் திமுக தொண்டர்களிடையே பெருமளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!