2021 வரை காத்திருக்கனும்..! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விரக்தி..!

By Selva KathirFirst Published Jun 4, 2019, 10:21 AM IST
Highlights

தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் விரக்தியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் விரக்தியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று காலையிலேயே அண்ணா அறிவாலயத்தில் ஆஜராகினர். மிகச் சரியாக காலை 10 மணி அளவில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்து சேர்ந்தார். ஸ்டாலின் வந்த மறுநிமிடம் கூட்டம் தொடங்கியது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கம்போல் கூட்டத்தை தொகுத்து வழங்கினார். 

மிக சொற்ப அளவிலான திமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமே மேடையில் பேச அனுமதிக்கப்பட்டனர். பேசிய அனைவருமே வழக்கம்போல் ஸ்டாலின் ஆணையிட்டால் ஆட்சிக் கவிழ்ப்பை சாத்தியமாக்கலாம் என்கிற ரீதியில் பேசினர். இந்தப் பேச்சுக்களை எல்லாம் சிறிதும் சலனமின்றி மிக அமைதியான முறையில் ஸ்டாலின் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். துரைமுருகன் பேசும்போது மட்டும் இடைத்தேர்தலில் ஏதோ முறைகேடு நடைபெற்றுள்ளது இல்லை என்றால் இரண்டு தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றிருக்கும் இந்த தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் பெற்ற அதிமுக கூட்டணி இடைத்தேர்தலில் மட்டும் 9 தொகுதிகளை வென்றது என்பதை எப்படி ஏற்க முடியும் என்றும் துரைமுருகன் பொடி வைத்துப் பேசினார். இறுதியாகத்தான் மு.க.ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். அப்போது திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளான இன்று திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இருக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எடப்பாடி அரசு தில்லுமுல்லு செய்து இடைத்தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் ஸ்டாலின் அப்போது பேசியுள்ளார். 

மத்தியிலும் ஆட்சி மாற்றம் இல்லாத நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு ஆட்சியை கவுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று ஸ்டாலின் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார். எனவே 2021 ஆம் ஆண்டு வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் ஸ்டாலின் சூசகமாக கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற ஜோரோடு எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் உட்கார்ந்து விடக்கூடாது என்ற ஸ்டாலின் கூறியபோது அவரது குரலில் ஒரு ஏற்றம் இருந்தது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் மக்களிடம் அதிருப்தியை பெறாமல் இருந்தாலே திமுக எளிதில் வென்றுவிடும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் எந்த இடத்திலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற அம்சங்கள் இடம் பெறவில்லை. அதேசமயம் அதிருப்தியில் இருக்கும் மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்க முயற்சிக்குமாறு ஸ்டாலின் கூறியதாக சொல்கிறார்கள்.

 

ஆனால் ஸ்டாலினின் பேச்சை பார்க்கும்போது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்பது சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது என்று திமுக நிர்வாகிகள் பேசியபடியே சென்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில் இதற்காக அவசரப்பட்டு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தளபதி யோசிப்பதாகவும் சிலர் கூறி சென்றனர்.

click me!