திமுகவை திணறடிக்க பூச்சாண்டி... அஸ்தமனமாகிறது மு.க.அழகிரி அரசியல்..?

By Thiraviaraj RMFirst Published Nov 16, 2020, 11:11 AM IST
Highlights

மு.க.ஸ்டாலின், அழகிரியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை. எப்படியாவது ஸ்டாலின் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் செய்தியாளர்களை அழைத்து திமுகவுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார் மு.க.அழகிரி. 

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின் தமிழகத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரத்தில் அக்கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பேட்டி, அறிக்கை கொடுத்து திணறடித்தார் அழகிரி.

'பா.ஜ.,வில் இணைகிறார், ரஜினி கட்சி துவக்கினால் அவருடன் சேரும் எண்ணத்தில் உள்ளார், அவரது மகன் தயாநிதி பா.ஜ.,வில் இணைகிறார், ஜனவரியில் புதிய கட்சியை துவங்க உள்ளார் அழகிரி…' என வதந்திகள் அரசியல்வட்டாரம் மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வலம் வந்து தி.மு.க.,வை கலங்கடித்து வருகின்றன.

தென்மாவட்டங்களில் மு.க. அழகிரியின் ஆதர்வாளர்கள் அதிகம் இருப்பதாலும், மு.க அழகிரி கடைசி நேரத்தில் ஏதாவது திட்டமிடுதலில் இறங்கினால் அப்படிப்பட்ட பிரச்னைகளை தவிர்க்கவும் மு.க. ஸ்டாலின், மு.க அழகிரிக்கு ரகசிய தூது விடப்பட்டிருப்பதாககூறப்பட்டது. சமாதானமாகச் செல்வோம் என்ற அடிப்படையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு தந்து இதன் பின்னணியில் செயல்படுமாறு மு.க.அழகிரியிடம் திட்டங்கள் சொல்லப்பட்டது. மு.க.அழகிரியும் இதற்கு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. 

அடுத்து, மு.க.அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்க போவதாக தகவல்கள் வெளியாகியானது. இதற்கான பேச்சுவார்த்தையும் பாஜக தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாவும் கூறப்பட்டது. தயாநிதி அழகிரிக்கு தென்மண்டல பொறுப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் இந்த தகவல் எல்லாமே திமுகவை திணறடிப்பதற்காக பரப்பப்படும் வதந்தி என கூறப்படுகிறது. 'தேர்தலில் தென் மாவட்டங்களில் நமது பலத்தை தி.மு.க.,விற்கு மீண்டும் நிரூபிக்க வேண்டும். உங்களை ஸ்டாலின் வழக்கம்போல் கண்டுகொள்ளாவிட்டால் கருணாநிதி தி.மு.க., என்ற பெயரில் புதிய கட்சி துவங்கி, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், நிர்வாகிகளை ஒன்றிணைத்து மீண்டும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும். விரைவில் முடிவு எடுங்கள்' என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மு.க.அழகிரியும் ‘’ஆதரவாளர்கள் தொடர்ந்து என்னிடம் பேசிவருவது உண்மை தான். அதிருப்தி தலைவர்கள் சிலரும் தொடர்பில் உள்ளனர். பா.ஜ.,வில் சேருவேன் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஆதரவாளர்களின் உணர்வுகளை மதித்து, கருத்தை கேட்டு புதிய கட்சி துவங்குவதா இல்லையா என முடிவு எடுப்பேன். வேறு எதுவும் இப்போது சொல்ல மாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ’’மு.க.அழகிரி கட்சி தொடங்குவதாக கூறுவதெல்லாம் மிரட்டல் ரகம். அவர் வேறு கட்சிக்கும் செல்ல மாட்டார். அதேவேளை மு.க.ஸ்டாலின், அழகிரியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை. எப்படியாவது ஸ்டாலின் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் செய்தியாளர்களை அழைத்து திமுகவுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார் மு.க.அழகிரி. இனி அவரது அரசியல் அவ்வளவு தான்’’என்கிறார் திட்டவட்டமாக. 

click me!