நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தந்த தமிழர்களை மறக்கலாமா..?? இணையதளத்தை போராட்ட களமாக்கிய அன்சாரி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2020, 12:28 PM IST
Highlights

மலையாளிகளுக்கு அடுத்த படியாக தமிழர்கள்தான் ஈட்டி தந்தார்கள். கொரோனா நெருக்கடி காரணமாக இன்று அந்தந்த நாடுகளில் அவர்கள் வேலையிழந்து, வருமானம் இழந்து தவிக்கின்றனர்.
 

வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களை அரசு செலவில் தாயகம் அழைத்து வர வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி ஜுன் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பதாகை ஏந்தி சமூக வலைதளங்களில் பதிவிடும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டம்  தோப்புத்துறையில் தனது வீட்டு வாசலில் இக்கோரிக்கையின் பதாகை ஏந்தி , மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமாக  தமிமுன் அன்சாரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு அன்னிய வருவாயை வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் மலையாளிகளுக்கு அடுத்த படியாக தமிழர்கள்தான் ஈட்டிதந்தார்கள். 

கொரோனா நெருக்கடி காரணமாக இன்று அந்தந்த நாடுகளில் அவர்கள் வேலையிழந்து, வருமானம் இழந்து தவிக்கின்றனர்.கடுமையான நெருக்கடியில் அவர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களை தேசிய பேரிடர்  மேலாண்மை நிதியிலிருந்து தனி நிதி ஒதுக்கி விமானம் மற்றும் கப்பல்களில் அரசு செலவில்  அழைத்து வர வேண்டும். அவர்கள் இங்கு வந்ததும் ,கொரோனா முன் சிசிச்சைகளை அளித்து, அவர்களை  தனிமைப்படுத்தி, பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பலாம். அதேபோல் தமிழக அரசு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு IAS அதிகாரியை கொண்டு உயிரூட்டி, தாயகம் திரும்பும் தமிழக தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை ஆதரித்து இன்று தமிழக அரசியல் தலைவர்களும், மஜக தலைமை நிர்வாகிகளும், தமிழக  கொள்கை ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும், பதாகை ஏந்தி சமூக இணையங்களில்  பதிவிடுவார்கள், இந்திய நேரம் மதியம் 2 முதல் வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்கள் பதாகை ஏந்தி பதிவிடுவார்கள், 

இந்திய தூதரகங்களிடமும் மனு கொடுக்கப்படும். ட்விட்டர் ஹேஷ்டக் பரப்புரையும், முகநூல் உள்ளிட்ட சமூக இணைய தள பரப்புரைகளும் இன்று தீவிரமாக முன்னெடுக்கப்படும். நாளை ஜூன் 6 மற்றும் 7 தேதிகளில் சமூக இடைவெளியுடன் மஜக சார்பில் இக்கோரிக்கையின் பதாகைகள்  ஏந்தி தமிழகம் முழுவதும் அமைதி வழி போராட்டம் நடைபெறும்.இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.இது மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம் என்பதால் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கையை செயல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!