இனியாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள் மோடி...!! பாஜகவுக்கு வகுப்பெடுத்த அன்சாரி..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2020, 5:10 PM IST
Highlights

ஆளும் கட்சிக்கு எதிராக  அதிருப்தி வருவது இயல்பு. வாக்குப்பதிவும்  முந்தைய தேர்தலை விட குறைந்திருந்தது. இந்த  நிலையிலும் கூட மக்கள் பாஜக வின் "தாமரை "யை விட, ஆம் ஆத்மியின் "துடைப்பம் "சின்னம்  நாட்டுக்கு நல்லது என  முடிவு செய்திருக்கிறார்கள்.

டெல்லி தேர்தல் முடிவு பாஜகவுக்கு மற்றொரு பாடம் என மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  இந்திய தலைநகர் டெல்லியின்  சட்டமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான  வெற்றியை  பெற்றுள்ளது. சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை திருத்த  ஆதரவு பரப்புரையை தீவிரமாக பாஜக முன்னெடுத்தது.  அதன் தலைவர்களின் பேச்சுகள் தீயை கக்கின. ஆனால்,வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி ஆம் ஆத்மி பரப்புரை செய்தது. அந்த அணுகுமுறையை  டெல்லி மக்கள் ஆதரித்துள்ளனர். 

இந்தியாவின் எல்லா மாநில மக்களும் வசிக்கும் தலைநகரில் வெளியாகியிருக்கும் இத்தேர்தல் முடிவுகள் மிகமுக்கியமானதாகும்.வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல், வெறியூட்டும் பரப்புரை, வன்முறையை தூண்டும் முயற்சிகள் என பாஜக எடுத்த கொல்லைப்புற அரசியலுக்கு டெல்லி மக்கள் எதிராக திரும்பி உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி வருவது இயல்பு. வாக்குப்பதிவும்  முந்தைய தேர்தலை விட குறைந்திருந்தது. இந்த  நிலையிலும் கூட மக்கள் பாஜக வின் "தாமரை "யை விட, ஆம் ஆத்மியின் "துடைப்பம் "சின்னம்  நாட்டுக்கு நல்லது என  முடிவு செய்திருக்கிறார்கள். 

சமீபத்தில் நடைப்பெற்ற ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவை தொடர்ந்து, டெல்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு தக்க பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அவர்களின் குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின்   மனநிலை இருப்பதை இனியாவது அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மியின் வெற்றி கவனமுடன் அணுகவேண்டிய ஒன்று என்றாலும், அவர்களின்  வெற்றி பாஜகவின் ஃபாஸிஸத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் அதை  வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். என தெரிவித்துள்ளார்.  

click me!