"குப்பை பொறுக்க வந்தியா?? ஐஜின்னா பயமா??" - உயரதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள்

First Published Feb 16, 2017, 10:28 AM IST
Highlights


கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக விசாரிக்க சென்ற போலீஸ் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் உயர் அதிகாரிகளை, அமைச்சர்கள் மிரட்டும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என 2 அணிகள் உள்ளன. இதில், சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என சில எம்எல்ஏக்களும், ஓ.பி.எஸ். முதல்வராக வேண்டும் என சில எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும், கடத்தி சென்று காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடத்தப்பட்டனரா என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியது. மேலும், இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, போலீஸ் உயர் அதிகாரிகள், மேற்கண்ட ரிசார்ட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறைகளில் வேறு ஆட்கள் தங்கி இருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும் என போலீசார் கூறியபோது, அவர்களை அனுமதிக்க முடியாது என மறுத்து அங்கிருந்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், எம்எல்ஏ வெற்றிவேல் உள்பட அனைவரும் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். எங்களை இதுபோன்று அகற்ற நினைத்தால் அவ்வளவுதான். என்று அதிகாரிகளை மிரட்டினர்.

போலீசார் அவர்களிடம் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை வரும் வகையில் தொடர்ந்து நீங்கள் இங்கு தங்கி உள்ளீர்கள். தினமும் அடிக்கடி மோதல் நடக்கிறது. பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர்.

ரிசாட்டுக்குள் நூற்றுக்கணக்கான அடியாட்கள் உள்ளனர். தயவு செய்து எல்லோரும் கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுகொண்டனர்.

ஆனால் தாங்கள் கலைந்து செல்ல முடியாது. இது எங்கள் உரிமை. ஐ.ஜி. வந்தால் எங்களுக்கு என்ன பயமா? நீங்கள் குப்பை பொறுக்க வந்தீர்களா, அதை பொறுக்குங்கள். இங்கு தேவையில்லாமல் ரிசார்ட்டுக்குள் நுழைய கூடாது என்றெல்லாம் பேசி அமைச்சர்கள் அவர்களுடன் வாக்குவதாத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த செய்தி NEWSFAST.IN உடனடி செய்தியாக கொண்டு வந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக, அமைச்சர்கள், போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாத வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

click me!