இவர் ஒருத்தருதான் உத்தமரா ? எச்.ராஜா மீது பாய்ந்த தமிழக அமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Sep 18, 2018, 9:02 AM IST
Highlights

இவர் ஒருவர்தான் உத்தமர் போலவும், மற்றவர்கள் எல்லாம் பெரிய குற்றவாளிகள் போலவும் பேசுவதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

 

இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்தாக எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எச்.ராஜாவை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவரை போலீஸ் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் பங்சேற்று பேசினார்.

 

இந்நிலையில் நீதிமன்றம் மற்றும் காவல் துறையினர் குறித்த எச்.ராஜாவின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் பொது வெளியில் பேசுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு என்றும், ஆனால் நீதிமன்றம் குறித்த அவரது பேச்சுக்கு, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால்தான் எச்.ராஜா போன்றோர் இப்படி பேசுகிறார்கள் என தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, இதே பேச்சை வேறு மாநிலத்தில் போய் பேசியிருந்தால் இந்நேரம் அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், எச்.ராஜா  ஒருவர்தான் உத்தமர் போலவும், மற்றவர்கள் எல்லாம் பெரிய குற்றவாளிகள் போலவும் பேசுவதை அவர்  இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!