ஆர்.கே.நகரில் தினகரன் வளைச்சு, வளைச்சு டோக்கன் கொடுத்த போதெல்லாம் பிடிக்காத போலீஸு, இங்கே நாங்க கொடுத்ததும் பிடிக்குதுன்னா ஆளுங்கட்சிக்கு என்னடா மரியாத இருக்குது? நடக்குறது இ.பி.எஸ். அரசாங்கமா இல்ல டி.டி.வி. அரசாங்கமா? என்று குமுறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
டி.டி.வி. தினகரனுக்கென்று எங்கேயோ பெரிய சைஸ் மச்சம் இருக்கத்தான் செய்கிறது. வெகு குறுகிய காலத்திலேயே, தமிழக அரசியலில் எங்கோ பெரிய உச்சம் தொட்டுவிட்டார் மனுஷன். ஒரு சின்ன விஷயத்தை சொன்னாலும் கூட ‘இது டி.டி.வி. ஸ்டைல் அரசியல்’ என்று சொல்லுமளவுக்கு பெயரெடுத்திருப்பது என்பது பெரிய விஷயம்தானே.
குறிப்பாக அரசியலில் ‘டோக்கன்’ எனும் வார்த்தையை சொன்னாலே, ‘அய்ய்ய்ய்...இது டி.டி.வி. மாமா ஸ்டைலாச்சே’ என்று பால் குடிக்கும் பச்சைப் பாப்பாவும் கூட, பாட்டிலை தள்ளிவிட்டு பொக்கைவாய் தெரிய சிரித்தபடி சொல்கிறது. அதுதான் தினாவின் சாதனை.
சரி அது கிடக்கட்டும். ஆர்.கே.நகரில் தினகரன் வளைச்சு, வளைச்சு டோக்கன் கொடுத்த போதெல்லாம் பிடிக்காத போலீஸு, இங்கே நாங்க கொடுத்ததும் பிடிக்குதுன்னா ஆளுங்கட்சிக்கு என்னடா மரியாத இருக்குது? நடக்குறது இ.பி.எஸ். அரசாங்கமா இல்ல டி.டி.வி. அரசாங்கமா? என்று குமுறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
எங்கே இந்த கூத்து?.... மயிலாடுதுறையின் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணிக்காக சீர்காழி பகுதியில் பிரசாரம் செய்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இந்த பிரசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் டூவீலருக்கு தலா நூற்றைம்பது ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் தர ஏற்பாடானதாம். இதற்கு ஒரு டோக்கன் எழுதியும் தரப்பட்டதாம். ஓஸி பெட்ரோலுக்காக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கான, புது பஸ் ஸ்டாண்ட் பகுதி பங்கிற்கு இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். அப்போது திடீரென அங்கே வந்த தேர்தல் செலவின உதவி அதிகாரியான தாசில்தார் சுவாமினாதன், அத்தனை பேரையும் போலீஸ் உதவியுடன் மடக்கியிருக்கிறார்.
பைக் பார்ட்டிகளின் கையிலிருந்த டோக்கன்களையும், பங்கில் இருந்த பத்தாயிரத்து சொச்சம் பணத்தையும் சட்டென்று பறிமுதல் செய்து, ரிப்போர்ட் எழுதிவிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட தி.மு.க. கூட்டணியினர் அங்கே சென்று தகவல் சேகரித்துவிட்டு, “அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பெட்ரோல் போட டோக்கன் கொடுத்திருக்கிறார். தங்களின் பழைய ஓனரான டி.டி.வி. தினகரனின் ஸ்டைலில் அரசியல் செய்கிறார் மணியன். ஆனால் அமைச்சரின் இந்த விதிமீறலை, நேர்மையான அதிகாரி மடக்கிவிட்டார். சூப்பரு” என்று வாட்ஸ் அப்பில் கிளப்பிவிட்டனர்.
இதைப் பார்த்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஏக டென்ஷாகிவிட்டார். பிறகு பத்திரிக்கைகளை அழைத்த போலீஸும், தேர்தல் அதிகாரிகளும் “அந்த டோக்கனில் இருந்தது அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரியின் பெயர்தான், அமைச்சர் பெயருமில்லை, அவர் வழங்கவுமில்லை. பக்கிரி மீதும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிலர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.” என்று தகவல் தந்திருக்கின்றனர். ஆனாலும் அடங்காத மயிலாடுதுறை தொகுதி தி.மு.க.வினர் இன்னும் ‘டோக்கன் ஓ.எஸ்.மணியன்’ என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
இவர்களின் குடைச்சல் போதாதென்று, அ.ம.மு.க.வினரும் “எங்கள் தலைவர் டி.டி.வி.யை இருபது ரூபாய் டோக்கன் கொடுத்தார் என்று விமர்சித்த அ.தி.மு.க. அரசின் அமைச்சர் மணியன், வெறும் தாளை டோக்கனாய் கொடுத்திருக்கிறார்.” என்று விமர்சித்து கொட்டுகின்றனர். அதிகாரிகளே தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாய் சொன்ன பிறகும் கூட தன்னை இழுத்துவிட்டு டார்ச்சர் செய்யும் எதிர்க்கட்சிகளை நினைத்து செம்ம கடுப்பில் இருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இந்நிலையில், தாங்கள் டோக்கன் கொடுத்தது எப்படி தாசில்தாரின் கவனத்துக்கு போச்சு? என்று மண்டையை குடையும் ஆளுங்கட்சியினர், ‘நம்மை இந்தளவுக்கு வெச்சு செய்றாங்க தினகரன் ஆளுங்க, போலீஸும் அதிகாரிகளும் நம்ம மேலே தாறுமாறா ஆக்ஷன் எடுக்கிறாங்க. அப்ப நடக்குறது நம்ம இ.பி.எஸ். ஆட்சியா இல்ல டி.டி.வி. ஆட்சியா?” என்று கொதிக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.