
முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததால் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சியான திமுக சார்பில் ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, முதல்வருக்கும் அரசுக்கும் அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்காது எனவும் விரைவில் கலைந்துவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கடல்நீர் சர்க்கரையாக கூட ஆகலாம். ஆனால் ஆட்சி கலையும் என்ற ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என தெரிவித்துள்ளார்.