
திமுகவும் தினகரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; அதனால் 2ஜி வழக்கின் தீர்ப்பை அவர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால், அரசுக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்துவந்தது.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரித்து வருகிறார். வழக்கின் வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இருதரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. ஊகங்கள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவே தவிர போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. அதனால், ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மேல்முறையீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தீர்ப்பின் நகல் வந்தவுடன் சிபிஐ சார்பில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலம் விடப்படாமல், முதலில் வருபவர்களுக்கு என்ற முறையில் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பது சரியான செயல் அல்ல என கூறி 122 நிறுவனங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு உகந்த வழக்கு. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே இறுதியானது அல்ல. மேல்முறையீட்டிற்கு உகந்த இந்த வழக்கில், மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பிற்கு தினகரன் வரவேற்பு தெரிவித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுகவும் தினகரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதனால் அவர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.