பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த கோடிக்கணக்கான ரூபாய்! அரூர் தினகரன் கட்சி வேட்பாளருக்கு குறி

By Selva KathirFirst Published Apr 5, 2019, 12:01 PM IST
Highlights

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த கோடிக்கணக்கான ரூபாய் விவகாரத்தில் அரூர் தினகரன் கட்சி வேட்பாளருக்கு வருமான வரித்துறையும் தேர்தல் பறக்கும் படையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த கோடிக்கணக்கான ரூபாய் விவகாரத்தில் அரூர் தினகரன் கட்சி வேட்பாளருக்கு வருமான வரித்துறையும் தேர்தல் பறக்கும் படையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் எடுத்துச் செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற பேருந்துகள் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுத்தினார்.

அப்போது அரூர் அருகே நரிப்பள்ளி எனுமிடத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். பேருந்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் சீட்டுக்கு அடியில் மூட்டை மூட்டையாக ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த மூட்டையைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மூட்டை முழுவதும் 2000 ரூபாய் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. உடனடியாக அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேருந்தில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினர். ஆனால் யாருமே அந்த பணத்துக்கு உரிமை கோரவில்லை. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பணம் இருந்த மூட்டைக்கு மேலே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த செல்வராஜ் என்கிற நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்வராஜ் தான் ஒரு அரசு ஊழியர் என்றும் திருவண்ணாமலையில் இருந்து தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியதாகவும் அந்த முட்டைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இதை பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் இருந்தது. பணத்துக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அந்தப் பணம் தேர்தலில் செலவிட எடுத்து வரப்பட்டது தான் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து உடனடியாக வருமான வரித்துறைக்கு தேர்தல் பறக்கும் படையினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து செல்வராஜை விசாரித்த போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை எடுத்து மூன்றரைக் கோடி ரூபாயையும் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து விட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டனர். தொடர்ந்து செல்வராஜ் என்கிற அந்த நபரிடம் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் அரூர் தொகுதிக்கு தான் அந்த மூன்றரை கோடி ரூபாய் பணம் சென்றது அதிகாரிகளின் விசாரணையில் உறுதியானது. மேலும் அந்தப் பணம் திமுக வேட்பாளருக்கு உரியது அல்ல என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் தான் அந்த மூன்றரைக் கோடி ரூபாய் பணம் இடைத்தேர்தலில் செலவழிக்க அரூர் தினகரன் கட்சி வேட்பாளர் முருகனுக்கு அனுப்பப்பட்டது என்கிற ஒரு தகவல் தேர்தல் பறக்கும் படை கிடைத்துள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் அரூர் தினகரன் கட்சி வேட்பாளர் முருகனை விசாரணைக்கு அழைக்க தேர்தல் பறக்கும் படை திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. இந்த ஒரே வாரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த துரைமுருகன் திருமாவளவன் தற்போது தினகரன் கட்சியில் முருகன் என மூன்று வேட்பாளர்கள் தொடர்புடைய நபர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

click me!