போலீஸ்காரர் வீடுகளுக்குப் பால் விநியோகம் கிடையாது... பால் முகவர்கள் சங்கம் அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2020, 2:45 PM IST
Highlights

 தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்திருப்பதாக பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 

விநியோகம் செய்யும் முகவர்களை மிரட்டுவது, கடைகளை மூடச்சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்திருப்பதாக பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், “தமிழகம் முழுவதும் பால் விநியோகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பேரிடர்க் காலத்திலும் மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை வேலை செய்யவிடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனப் பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர், பால்வளத் துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு சென்றும் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது. எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்குக் காவல்துறையினரால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை கடைநிலைக் காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

click me!