வெண்டிலேட்டர்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதா இந்தியா..?? அச்சத்தில் பதறும் மதுரை எம்பி , கேள்விமேல் கேள்வி

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2020, 2:47 PM IST
Highlights

இந்தியா முழுவதும் வெண்டிலேட்டர் தயாரிக்கின்ற நிறுவனங்களின் ஏற்றுமதியை நான்கு நாட்களுக்கு முன்பு வரை அனுமதித்திருக்கிறீர்கள். மேற்குலக நாடுகள் மிக அதிக வெண்டிலேட்டர்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்கிறது. 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மத்திய மாநில அரசுகளிடம் முக்கிய இரண்டு கேள்விகைகளை எழப்பியுள்ளார் அதன் விவரம் இதோ...பிரதமரும். முதல்வரும் தொடர்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டி, அவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புக்களை எடுத்துச்சொல்லி வருகின்றனர். நாட்டை ஆளும் பிரதமர் முதல்  உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரை மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகின்றனர். மக்களின் உயிர் காக்கவே இச்செயல்பாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசை எந்த வகையிலும் குறைசொல்ல இது நேரமில்லை, எனவே அரசையே முன்னுதாரணமாக கொண்டு மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் பொறுப்போடு நடந்து கொள்ள முயற்சிக்கிறோம்.  அதற்கு உதவியாக இரண்டு விசயங்களை மட்டும் எங்களுக்கு தெரிவியுங்கள். 

1. பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே!  இந்தியா முழுவதும் வெண்டிலேட்டர் தயாரிக்கின்ற நிறுவனங்களின் ஏற்றுமதியை நான்கு நாட்களுக்கு முன்பு வரை அனுமதித்திருக்கிறீர்கள்.  மேற்குலக நாடுகள் மிக அதிக வெண்டிலேட்டர்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்கிறது. இதையெல்லாம் பற்றி இப்பொழுது விளக்கம் எதுவும் சொல்ல வேண்டாம்.  இந்திய நிறுவனங்களிடம் இப்பொழுது எவ்வளவு வெண்டிலேட்டர்கள் கைவசம் இருக்கிறது? உள்நாட்டு,  மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு வெண்டிலேட்டர்களைப் பெற்று இப்பொழுது இந்திய மருத்துவமனை பயன்பாட்டுக்கு நீங்கள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறீர்கள்? 


 
2 தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே! தமிழ்நாடு மருந்து சேவைக் கழகம் (TNMSC) மூலம்  N-95 முகக்கவசம் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள்?  இன்றைய தேதியில் உங்கள் கையில் அப்படியொரு பொருள் இருக்கிறதா? இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள். கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் போராட்டத்துக்கு அடிப்படையானது வெண்டிலேட்டர். கரோனா தடுப்புக்கு மிக அவசியமானது N-95 முகக்கவசம். தேசியப்பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிற கொரோனா தொற்றினை தடுக்கும் மிக அடிப்படையான இந்த இரண்டு விசயத்தில் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு விழிப்போடு செயல்பட்டுள்ளன பாருங்கள் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல இந்த விபரங்கள் மிக முக்கியமானது. மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் உங்களைப்போல விழிப்புணர்வோடு செயல்பட எங்களுக்கு உதவுகள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேஞன் கோரிக்கை வைத்துள்ளார்.  

click me!