வெளிமாநிலத்தவர்களுக்கு மருத்துவ இடங்கள்... மத்திய அரசை பாய்ந்து அடித்த அதிமுக எம்எல்ஏ..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2020, 12:02 PM IST
Highlights

5 ஆண்டுகள் புதுச்சேரி மாநிலத்தில் குடியிருந்தால் தான் அவர்கள் குடியுரிமை பெற முடியும், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் ஓராண்டு பணி புரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு புதுச்சேரி மாநிலத்திலுள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அளிப்பது என்பது தவறான ஒன்று.

புதுவை ஜிப்மர் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரியும் மாநில ஆளுநரிடம் புதுவை அதிமுக எம்எல்ஏ அன்பழகன் மனு அளித்துள்ளார்.  புதுவை மாநில அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ கல்வியில் புதுச்சேரி மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் அபகரித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மொத்தமுள்ள 250 இடங்களில் நம்முடைய மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 64 இடங்களில் 31 இடங்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு சம்பந்தமில்லாத குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது நம் மாநிலத்திற்கு ஆண்டுதோறும் இழைக்கப்பட்டு வரும் அநீதியாகும். 

5 ஆண்டுகள் புதுச்சேரி மாநிலத்தில் குடியிருந்தால் தான் அவர்கள் குடியுரிமை பெற முடியும், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் ஓராண்டு பணி புரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு புதுச்சேரி மாநிலத்திலுள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அளிப்பது என்பது தவறான ஒன்று. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அட்டவணை இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்களில் 8 இடங்களை புதுச்சேரி மாநிலத்திற்கு சம்பந்தமே இல்லாத வெளி மாநிலத்தைச் சேர்ந்த அட்டவணை இனத்து பிள்ளைகளைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இது நம்முடைய மாநில அட்டவணை இன பிள்ளைகளுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும். 

புதுச்சேரி மாநிலத்திற்கு என வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு புதுச்சேரி மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் மத்திய சுகாதாரத் துறையும், ஜிப்மர் நிர்வாகமும் இடமளித்துள்ளது எப்படி?  மத்திய அரசு ஊழியர்கள் என்ற பெயரில் மாநிலத்திற்காக ஒதுக்கப்பட்ட  இடங்களை திட்டமிட்டு அபகரிப்பது மிகப்பெரிய குற்றச் செயலாகும்.  இதில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இதன் மீது விரிவான சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது வண்ணமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அன்பழகன் எம்எல்ஏ அதில் கூறியுள்ளார்.
 

click me!