எம்.பி.க்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு..?? தலைமைச் செயலாளரை தாறுமாறாக கிழித்த வைகோ..!!

By Ezhilarasan BabuFirst Published May 14, 2020, 11:23 AM IST
Highlights

திமுக எம்.பி.க்களுக்கு அவமரியாதை என்பது தலைமைச் செயலாளரின் மரபை மீறிய பண்பாடற்ற செயல் என மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் 

திமுக எம்.பி.க்களுக்கு அவமரியாதை என்பது தலைமைச் செயலாளரின் மரபை மீறிய பண்பாடற்ற செயல் என மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் .திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தில், இலட்சக்கணக்கான மக்கள் பல்வேறு உதவிகளை நாடி அழைப்பு விடுத்துள்ளனர். திமு கழகத்தின் சார்பில் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து வந்துள்ள ஒரு இலட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்காக திமுகவினர் தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.

  

அதாவது  திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையிலான முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றுள்ளது.தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்களைச் சந்தித்து,  மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தலைமைச் செயலகம் என்பது சாதாரண மக்கள்கூட தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கும் முகாமையான இடம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இதுதான் நிலை எனில், எளிய மக்களிடம் அதிகார வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும்? இதுபோன்ற பண்பாடற்ற, நெறிகெட்ட மரபு மீறிய செயல்களை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது.மக்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டாமல், மிகுந்த ஆணவத்துடன் நடந்துகொண்ட தலைமைச் செயலாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். என வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

click me!