உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி... 6 தொகுதிகளை ஒதுக்கி நினைத்ததை சாதித்த திமுக...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 6, 2021, 7:28 PM IST
Highlights

மதிமுக 12 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட கேட்ட நிலையில், திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக கூறியிருந்தது. 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், மதிமுகவுடன் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

மதிமுக 12 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட கேட்ட நிலையில், திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக கூறியிருந்தது. நேற்று தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ‘திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ​திமுக வுடன் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையில் மதிமுக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை திமுக மரியாதையோடுதான் நடத்துகிறது. திமுக தொகுதி பங்கீடு குறித்து கமல் சொன்ன கருத்து தவறானது. விசிகவை திமுக மரியாதையாகதான் நடத்தியது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு மதிமுகவை திமுக இன்னும் அழைக்கவில்லை. மதிமுக மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை” என்றும் கூறியிருந்தார். 

இன்று அண்ணா அறிவாலயத்தில் வைகோ தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

click me!