
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து மார்ச் 3ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாகவது:-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனங்களை தேர்வு செய்த மத்திய அரசு, அதற்கான ஒப்பந்தத்தை விரைவில் வழங்க இருக்கிறது.
இந்தியாவை எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய செய்யவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசபக்தி போர்வையில் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகவே தோன்றுகிறது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தையும், பாறை எரிவாயு திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து தோல்வி அடைந்தது.
இதனால், இப்போது ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முயல்கிறது. நெருப்பை எந்த பெயரில் அழைத்தாலும் அது எரிக்க தான் செய்யும் என்பதை போல, இந்த திட்டத்துக்கு என்ன பெயர் வைத்தாலும், அது சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நெடுவாசல் கிராமம் வளமான விவசாய நிலங்களை கொண்டுள்ளது. முப்போகம் நெல் விளையும் இந்த பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பண பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இந்த பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்குடன் கடந்த ஆண்டு இரு விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்திய ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டது.
அதை சுற்றியுள்ள நிலங்களையும் கையகப்படுத்தி ஆய்வை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மூலம் மட்டுமின்றி தனியார் நிறுவனத்தின் மூலமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், அது அப்பகுதி மக்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து எண்ணெய்யும், எரிவாயும் எடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், அங்கு வேலை செய்வோருக்கும் உள்ளங்கைகளில் வெடிப்பு, தோல் உரிதல், சுவாச கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
நெடுவாசலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அங்குள்ள மக்களுக்கும் இப்பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற நிலையில் இருந்து எண்ணெய் கிணறு என்ற நிலைக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க முடியும்
நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்தின் தீமைகளை விளக்கி கடந்த 17ஆம் தேதி நான் விரிவான அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உழவர் அமைப்புகளும், பொதுமக்களும், மாணவர்களும் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். மற்றொருபுறம், இன்னும் தொடங்கப்படாத இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முயல்கிறார்.
தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னையாக இது உருவெடுத்திருக்கும் நிலையில், இது குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு இது வரை அறிவிக்கவில்லை. ஜெயலலிதா பயன்படுத்திய இருக்கையில் அமைந்த மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்திலிருந்து முதலமைச்சர் இன்னும் மீளவில்லை. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனோ, தமிழகத்திலுள்ள விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; வட்டிக்கு பணம் கொடுத்து வருவாய் ஈட்டுபவர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தியவர். இவர்கள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்புவதும், மண்குதிரையில் ஏறி அலைகள் நிறைந்த கடலை கடந்து விடலாம் என்று நம்புவதும் ஒன்று தான்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை தான் உள்ளது. எனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெடுவாசல் மற்றும் காரைக்காலில் தொடர் முழக்கப் போராட்டங்கள் நடைபெற உள்ளன. நெடுவாசலில் எனது தலைமையில் அறப்போராட்டம் நடைபெறும். காரைக்காலில் நடைபெறும் போராட்டத்திற்கு புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ் தலைமையேற்பார். உழவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டங்களில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.