சொன்னா நம்புங்க! மோடியை காட்டிலும் மன்மோகன் சிங்தான் அதிகம் வெளிநாடு போயிருக்கிறார் !!அடித்துச் சொல்லும் அமித் ஷா….

By Selvanayagam PFirst Published Oct 11, 2019, 10:33 AM IST
Highlights

வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடியை காட்டிலும் மன்மோகன் சிங் தான் அதிகம் சென்றுள்ளார் என காங்கிரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
 

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காங்கிரஸ் கட்சி அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான உலக சுற்றுலா தினம் என தலைப்பிட்டு பிரதமர் மோடி விமானத்தில் நின்றபடி கைகாட்டும் புகைப்படங்களை பதிவு செய்து கிண்டல் செய்து இருந்தது.

காங்கிரசின் இந்த தொடர் விமர்சனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் தலைவருமான அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்வது பொறாமையின் வெளிப்பாடு. பிரதமர் மோடியை காட்டிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோடி எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்கள் கூடுகின்றனர். மோடி, மோடி என அவர்கள் முழக்கம் செய்கின்றனர். அந்த முழக்கம் தேசத்துக்கான மரியாதை. 

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வயிறு எரிகிறது. உடனே மோடி ஏன் அதிகம் வெளிநாடுகளுக்கு செல்கிறார் என சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்ததிர மோடிதான் உலகின் மிகவும் பிரபலமான பிரதமர் என்பதை நிருபணம் செய்து விட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவருடைய மேடம் எழுதி கொடுத்த காகிதத்தைத் படிக்க மட்டுமே பயன்படுத்துவார். அவர் பதவியிலிருந்த போது ரஷ்யாவுக்கான அறிக்கையை மலேசியாவிலும், மலேசியாவுக்கான அறிக்கையை ரஷ்யாவில் படித்தார் என அமித்ஷா கிண்டல் செய்தார்.

பிரதமர் மோடி பதவியேற்ற 2014 மே முதல் இதுவரை 48 வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வாயிலாக 55 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

click me!