இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்யாதீங்க.. பிரதமர் மோடியிடம் நேருக்கு நேரா சொன்ன மம்தா பானர்ஜி! பின்னணி இதுதான்

By karthikeyan VFirst Published May 11, 2020, 6:28 PM IST
Highlights

கொரோனாவால் நாடே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலிலும் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கும் மே 17ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. 

எனவே, ஊரடங்கு நீட்டிப்பு, செய்யப்பட வேண்டிய தளர்வுகள், மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகள், மாநிலங்களில் கொரோனாவின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

கடந்தமுறை நடந்த பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த முறை பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, வெளிநாடுகளுடனும் மிகப்பெரிய மாநிலங்களுடனும் எல்லையை பகிரும் மாநிலம் மேற்கு வங்கம். எனவே மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலான விஷயம். ஆனால் மேற்கு வங்க அரசு கொரோனாவை தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அப்படியிருக்கையில், மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழலில் அரசியல் செய்யக்கூடாது.  எல்லா மாநிலங்களையுமே மத்திய அரசு, ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டுமே தவிர பாரபட்சம் காட்டக்கூடாது என்று கடுமையாக பேசியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் இதுவரை 1939 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இறப்பு விகிதம் 13.2% என்றளவில் அதிகமாகவுள்ளது. 

மம்தா பானர்ஜி மத்திய அரசின் செயல்பாடுகளை பிரதமர் மோடியிடமே நேரடியாக விமர்சித்ததற்கான பின்னணியை பார்ப்போம்.

மேற்கு வங்கம், வங்கதேசத்துடன் எல்லையை பகிரும் மாநிலம். வெளிநாடுகளுடன் எல்லையை பகிரும் மாநிலங்களில் வெளிநாட்டுடனான உறவு தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம், அரசியலமைப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துடன் எல்லையை மேற்கு வங்கம் பகிரும் நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான வர்த்தகத்தை தடுத்தார் மம்தா பானர்ஜி. அது வெளியுறவுக்கொள்கையிலும் பொறுப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

எனவே இதுகுறித்த கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளை கடுமையாக தாக்கியும் எச்சரித்தும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். 

அந்த கடிதத்தில், மேற்கு வங்க அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மட்டும் மீறவில்லை; அரசியலமைப்பு சட்ட ஷரத்துகள் 253, 256 மற்றும் 257 ஆகியவற்றையும் மீறியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 253 வெளிநாட்டுடனான உடன்படிக்கை தொடர்புடையது. ஷரத்துகள் 256 மற்றும் 257 ஆகிய இரண்டும், வெளிநாட்டுடனான உறவு குறித்த உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும், வெளிநாட்டுடன் எல்லையை பகிரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. 

மேலும், மே 1ம் தேதி மாநில அரசுகளுக்கு ஊரடங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்திற்கு தடையில்லை என்று கூறியிருந்ததையும் மத்திய உள்துறை செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின்னர் மேற்கு வங்க அரசு, வங்கதேசத்துடனான வர்த்தகத்திற்கு எல்லையை திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவத்தின் விளைவாகத்தான் பிரதமர் மோடியிடம், மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்யக்கூடாது என்று ஆதங்கத்துடன் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 

click me!