கொரோனா சாக்கில் வசூல் வேட்டைக்கு பிளான்போட்ட தென்னக ரயில்வே..!! நாகரீகமா கழுவி ஊத்திய மதுரை எம்.பி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2020, 3:41 PM IST
Highlights

கொரோனா வைரஸ் சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு  மற்றும் அரசு சார்ந்த துறைகளின் கடமை. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதற்கு கட்டண உயர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவது நேர்மையான செயல் அல்ல.

கொரோனா வைரஸ் பரவலாக்கத்தைத் தடுக்க பயணிகளுடன் ரயில் நிலையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை  குறைப்பதற்காக  நடைமேடை கட்டணத்தை ரூ.10 லிருந்து 50 ஆக உயர்த்தி சென்னை மற்றும் மதுரைக் கோட்ட மேலாளர்கள் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-  கொரோனா வைரஸ் சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு  மற்றும் அரசு சார்ந்த துறைகளின் கடமை.  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதற்கு கட்டண உயர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவது நேர்மையான செயல் அல்ல.  அது மட்டுமல்ல அந்த விழிப்புணர்வை உருவாக்க இரயில்வே நிர்வாகத்துக்கு இருக்கும் பொறுப்பை கைவிடும் பொறுப்பற்ற செயலும் கூட. உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்டுகிறேன்.

“கொரோனா வைரஸ் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி தருவதை நிறுத்துகிறோம். தேவைப்படுபவர்கள் மட்டும்கேட்டுவாங்கிக்கொள்ளலாம்” என்று சில நாட்களுக்கு முன் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.  அவ்வறிப்பினைத் தொடர்ந்து பயணிகளுக்கு கம்பளி தருவது உடனடியாக நிறுத்தப்பட்டது. அதாவது தூய்மை மற்றும் பாதுகாப்பான பொருட்களை கொடுக்க முடியாமல் பயணிகளுக்கு தாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய பணியை ஒரே நாளில் கைவிடுவீர்கள். ஆனால் பயணிகளோ கொரோனா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொறுப்புணர்வுக்காக ஐந்து மடங்கு கட்டணத்தை உடனே தரவேண்டும் என்று உத்தரவிடுவீர்களா? 


 
இது கடும் கண்டனத்துக்குரியது.  எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு இக்கட்டண உயர்வை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயணிகள் உடன் பலரை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுங்கள். பயணிகளோடு தேவையில்லாமல் ரயில் நிலையத்துக்குள் வருபவர்களை காவலர்கள் மூலம் அறிவுறுத்தி திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்.  இது பயணிகள் மீது இரயில்வே நிர்வாகம் தனது அக்கறையை வெளிப்படுத்த வேண்டிய நேரம்.
 பொது மக்கள் அத்தியாவசியம் அல்லாத பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளன. அப்படி இருக்கும் சூழலில் இப்பொழுது வரை பயணச்சீட்டு ரத்துக்கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் வசூலித்துக் கொண்டிருக்கிறது. 

இதனை உடனடியாக கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அது சம்பந்தமாக இரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன்.
 அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை கைவிடுமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை மார்ச் 6 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, ஈரோடு, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட இடத்தில் இன்றுவரை ஒருங்கிணைந்த ஓட்டுனர் மற்றும் காப்பாளர் வருகைப்பதிவு என்பது பயோமெட்ரிக் முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. 

இதை விடக்கொடுமை சுவாச பரிசோதனை (Breathlyzer Test) முறை.  இம்முறையால் கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் விமானப் போக்குவரத்து துறையே இப்பரிசோதனையை கைவிட்டுவிட்டது.  ஆனால் தென்னக இரயில்வே தனது ஊழியர்களுக்கு இன்றுவரை இப்பரிசோதனையை செய்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலாக்கத்தை தடுக்க இரயில்வே துறை தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய மாற்றத்தை செய்து  தனது ஊழியர்களையும், இரயில்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களையும் பாதுகாக்க கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசுத்துறைகளில் நாள்தோறும் மிக அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கையாளும் துறை  இரயில்வே துறை. எனவே மிக அதிக சவால்களை அத்துறை சந்திக்கிறது. அதனை திறம்பட நிறைவேற்றும் ஆற்றலும் அனுபவமும் இரயில்வே துறைக்கு உண்டு. தனிமனிதன், சமூகம், அரசு என மூன்று தரப்பிலும் ஒருங்கிணைந்து செயலாற்றும் முயற்சிக்கு தென்னக இரயில்வே சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கட்டும்.


 

click me!