
டிடிவி தரப்பில் நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதுடன் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இதனிடையில் அதிமுக துணைப்பொது செயலாளராக இருந்த டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி அறிவித்தார்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரியும், அனுமதி அளிக்க கோரியும் டிடிவி தரப்பை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தரப்பில் நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதுடன் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.