உஹான் முதல் மாமல்லபுரம் வரை: பிரதமர் மோடி-சீன அதிபர் பேச்சில் கவனத்தை ஈர்த்த தமிழக அதிகாரி யார் தெரியுமா?

By Asianet TamilFirst Published Oct 13, 2019, 5:49 PM IST
Highlights

மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பில், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சீனாவில் பேசப்படும் மாண்டரின் மொழியில் நல்ல புலமை தமிழகத்தைச் சேர்ந்த மது சூதன் ரவிந்திரன்( ஐஎஃப்எஸ் அதிகாரி) தற்போது பிரதமருக்குத் துணையாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் மட்டுமல்லாது கடந்த ஆண்டு சீனாவில் உஹான் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பிலும் மது சூதன் மொழிபெயர்ப்பாளர் பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த மது சூதன் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர். அதன்பின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பல்கலைக்கழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எம்.ஏ. மொழிமாற்றம் மற்றும் பேச்சுக்கலைப் பிரிவில் பட்டம் பெற்றார். மதுசூதன் தந்தை கோவையையும், தாய் திருவண்ணாமலையும் சேர்ந்தவர்.

மது சூதனுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், மாண்டரின்(சீன மொழி) ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் சீனாவில் நீண்டகாலம் பணியாற்றியதால் அவரின்களின் மாண்டரின் மொழியை மதுசூதன் நன்கு கற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான மது சூதன் 2007-ம் ஆண்டு ஐஃஎப்எஸ் பேட்ஜ் அதிகாரி. மதுசூதன் தன்னுடைய பெரும்பாலான பணிக்காலத்தை சீனாவில் கழித்தார் என்பதால் சீன மொழியான மாண்டரின் அவருக்கு நன்கு  தெரியும்.ஐஎஃப்எஸ் படித்து பயிற்சி முடித்த பின், கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெய்ஜிங்கில் உள்ள இந்திய துணைத் தூதகரத்தில் 3-வது பிரிவு செயலாளராக மது சூதன் நியமிக்கப்பட்டார். அதன் பின் 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகரில் துணைத் தூதராகப் பணியாற்றினார்.

அங்கிருந்து மீண்டும் சீனாவின் இந்தியத் தூதரகத்தில் (அரசியல்) பணி அமர்த்தப்பட்டார். 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 2-ம் நிலை செயலாளராகவும், 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல் நிலை செயலாளராகவும் மது சூதன் பணியாற்றினார். தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

click me!