குடியுரிமையைக் கொடுக்க சட்டம் போடுவாங்களா... இல்ல பறிக்க போடுவாங்களா.? பாஜகவக்கு மு.க. ஸ்டாலின் சுளீர் கேள்வி!

By Asianet TamilFirst Published Feb 26, 2020, 11:01 PM IST
Highlights

குடியுரிமை வழங்கதான் அரசு சட்டம் போடும். ஆனால், குடியுரிமையைப் பறிக்க சட்டம் போடும் அரசாக பா.ஜ.க. உள்ளது. சிலர் விஷம பிரச்சாரம் செய்வதுபோல இந்தப் போராட்டம் இஸ்லாமியர்களைக் காப்பதற்கான போர் அல்ல; இந்தியர்களைக் காப்பதற்கான போர். 

வன்முறையாளர்கள் கையில் தலைநகர் டெல்லி நகரமே சிக்கியிருக்கிறது என்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன செய்கிறார்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஏஏ, என்.ஆர்.சி. என்.பி.ஆர்.-க்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ சென்னையில் நடைபெற்றது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். மாநாட்டில் அவர் பேசுகையில், “நாடு முழுவதும் அமைதியற்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. மக்கள் கொடுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். டெல்லியில் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது அங்கே யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வன்முறையாளர்கள் கையில் தலைநகர் டெல்லி நகரமே சிக்கியிருக்கிறது என்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன செய்கிறார்?
தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மாநிலங்களில் என்ன நிலை வரும் என்பதைச் சிந்திக்க வேண்டும். டெல்லி கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு மனமே இல்லை என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் எல்லாமே பிரச்னைகள்தாம். அரசியல் செய்வதற்கான ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இது மக்கள் பிரச்னை.


குடியுரிமை வழங்கதான் அரசு சட்டம் போடும். ஆனால், குடியுரிமையைப் பறிக்க சட்டம் போடும் அரசாக பா.ஜ.க. உள்ளது. சிலர் விஷம பிரச்சாரம் செய்வதுபோல இந்தப் போராட்டம் இஸ்லாமியர்களைக் காப்பதற்கான போர் அல்ல; இந்தியர்களைக் காப்பதற்கான போர். இதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பிரிப்பது முற்றிலும் தவறு. இதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்தியர்கள்.  அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும். இதேபோல நாடாளுமன்றத்தில் சிஏஏ-வை ஆதரித்து வாக்களித்த அதிமுக  மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!