இந்த வேண்டாத வேலையை விடுத்து நாட்டை முன்னேற்றும் வேலையை பாருங்கள்..!! மத்திய அரசுக்கு திருமாவளவன் அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2020, 9:56 AM IST
Highlights

எனவே இத்தகைய ஒரு குழுவை அமைக்கத் தேவையில்லை, பண்பாட்டு வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும் விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் பணியில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு  நியமித்துள்ள குழு நம்பகத் தன்மை கொண்டதாகவும், ஒரு சார்பற்றதாகவும் இருக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குழுவே தேவையற்ற ஒன்று எனவும் அது வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தென்னிந்தியாவை சார்ந்தவர்களும், மத சிறுபான்மையினர், தலித்துகள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி பலரும் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குழுவை மாற்றியமைக்கப் போவதாகவும் அதில் பலரையும் உள்ளடக்க போவதாகவும் இப்போது செய்தி வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின்  பண்பாட்டு வரலாற்றை எழுதுகிற வேலை அரசாங்கத்தை சார்ந்தது அல்ல. அரசாங்கத்தால் குழு அமைத்து எழுதப்படுகிற எந்த ஒரு வரலாறும் நம்பகத் தன்மை கொண்டதாக, ஒருசார்பற்றதாக இருக்க முடியாது. இது எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும். எனவே இத்தகைய ஒரு குழுவை அமைக்கத் தேவையில்லை, பண்பாட்டு வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும் விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் பணியில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

மோடி அரசு 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றதுமே இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு முயற்சித்தது, அதற்காக கடந்த ஆட்சியின் போது 14 பேர் கொண்ட குழு ஒன்றை கை என் தீட்சித் என்பவர் தலைமையில் அமைத்தது. இந்தியாவின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக பரிந்துரைகளை கொடுப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. என கே என் தீட்சித் அப்போது கூறியிருந்தார். ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள் அல்ல, அவர்கள் இந்த நாட்டுக்கு வெளியில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். அவர்களுக்கு முன்பு இங்கு சிறப்பான பண்பாட்டுடன் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது வரலாற்று உண்மை.  அண்மைக்காலங்களில் டிஎன்ஏ அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் அதையே மெய்ப்பித்துள்ளன. அதுமட்டுமின்றி சிந்துவெளி பண்பாடும், திராவிட பண்பாடும் ஒன்று எனவும் சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் தான் எனவும் அந்த ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் மெய்ப்புத்துள்ளன. இந்த நாடு முழுவதும் நாகர்களை ஆட்சி புரிந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ் தான். தமிழ் என்பதே சமஸ்கிருதத்தில் திராவிடர் என திரிபடைந்து இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிடர்கள் ஆரியர் குடியேற்றத்திற்கு பின்னர் தென்னிந்தியாவுக்கு தள்ளப்பட்டனர் என புரட்சியாளர் அம்பேத்கர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார்.அறிவியல் அடிப்படையிலான இந்த வரலாற்று உண்மைகள் இன்றைய  இந்துத்துவ வாதிகளுக்கு பிடிக்கவில்லை அதனால் இதை புராணங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அதற்காகவே இந்த மாதிரியான குழுக்கள் அமைக்கப் படுகின்றன. 

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட கே என் தீட்சித் குழுவும் கலாச்சாரம் அமைச்சகத்தின் கீழ் தான் அமைக்கப்பட்டது. அப்போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அந்த குழு என்ன ஆனது?  அது அறிக்கையை சமர்ப்பித்ததா என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் பண்பாட்டு வரலாற்றை மாற்றி எழுதப் போகிறோம் என்று இப்போது மத்திய அரசு குழு அமைத்து இருப்பது தேவையற்ற ஒன்றாகும். இந்தியாவை ஒரே மதம், ஒரே பண்பாடு கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதை விடுத்து கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் மோடி அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மத்திய அரசு அமைத்திருக்கும் குழுவில் எங்களுக்கு இடம் கொடுங்கள் என்று கேட்பதை விடவும் இந்த குழுவை வேண்டாம் என்று உரத்து முழங்கும் வேண்டியதே இன்றைய தேவை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். கல்வியாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இந்த குழுவை நிராகரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!