கேரளாவை பாருங்கள்..! குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீர்கள்! கர்ஜித்த நட்டா! கதிகலங்கிய நிர்வாகிகள்!

By Arun VJFirst Published Dec 2, 2019, 1:45 PM IST
Highlights

தமிழகத்திற்கு வந்த வேகத்தில் டெல்லி திரும்பினாலும் நிர்வாகிகளுக்கு மிக கண்டிப்பான உத்தரவுகளை போட்டுவிட்டு சென்றுள்ளார் ஜே.பி நட்டா.

தமிழகத்திற்கு வந்த வேகத்தில் டெல்லி திரும்பினாலும் நிர்வாகிகளுக்கு மிக கண்டிப்பான உத்தரவுகளை போட்டுவிட்டு சென்றுள்ளார் ஜே.பி நட்டா.

பாஜக தலைவராக உள்ள அமித் ஷா காஷ்மீர் விவகாரத்தில் பிசியாக இருந்த காலகட்டத்தில் செயல் தலைவராக இருந்த நட்டா தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிலவரங்களை நேரடியாக அறிந்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக நட்டா அறிக்கை தயார் செய்து வருகிறார்.

அந்த வகையில் சனிக்கிழமை சென்னை வந்த நட்டாவை பெரிய அளவில் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. மேலும் பாஜகவும் கூட அதை விரும்பவில்லை. முழுக்க முழுக்க கட்சி சார்ந்த விஷயம் என்பதால் நட்டாவின் தமிழக பயணம் லைம் லைட்டுக்கு வர விரும்பவில்லை என்கிறார்கள். அதனால் தான் வழக்கமாக பாஜக மேலிடத் தலைவர்கள் தமிழகம் வரும் போது செய்யும் ஏற்பாடுகள் கூட நட்டாவிற்கு செய்யப்படவில்லை. இருந்தாலும் சென்னையில் இருந்த குறுகிய காலத்திற்குள் கிட்டத்தட்ட பாஜகவின் தமிழக நிலைமையை ஒட்டு மொத்தமாக தெரிந்து விட்டு சென்றுள்ளார் நட்டா.

பாஜக நிர்வாகிகள் என தன்னை வந்து சந்தித்த நிர்வாகிகள் அனைவருமே பெரும்பாலும் 60 வயதை நெருங்கியவர்களாக இருந்தார்கள். அதோடு மட்டும் அல்லாமல் கட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட ராதாரவி, நமீதா குறித்து நட்டாவிடம் ஓவர் ஹைப் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே மார்க்கெட் போனவர்கள் என்பதை தெரிந்து சீரியசாக சில கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.

மேலும் தமிழக பாஜக சாட்டிலைட் சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் மட்டுமே இருப்பதையும், இன்னும் கிராம அளவில் கட்சி சென்றடையவில்லை என்பதையும் புரிந்து கொண்டு சில கருத்துகளை வெளிப்படையாக பேசியுள்ளார். பக்கத்தில் கேரளாவை பாருங்கள், சபரி மலை விவகாரத்தை வைத்து அந்த மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்தனர். சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றோம்.

வெற்றி பெறவில்லை என்றாலும் கூட தற்போது பாஜக அங்கு ஒரு சக்தியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்னும் நாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நிர்வாகிகளில் புதிததாக யாரும் இல்லை, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும் இல்லை, கிட்டத்தட்ட நாமும் தமிழகத்தில் காங்கிரசை போலத்தான் இருக்கிறோம். கோஷ்டி சேர்த்துக் கொண்டு டெல்லி லாபியோடு கட்சி செயல்பாடுகளை முடித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தை மோடி – அமித் ஷா மிக முக்கியமான மாநிலமாக கருதுகிறார்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய வியூகத்துடன் களம் இறங்க உள்ளார். அதற்கு இங்குள்ள நிர்வாகிகள் தயாராகவில்லை என்றால் அதற்கு சரியான நிர்வாகிகள் யாரோ அவர்கள் புதிதாக இங்கு சேர்க்கப்படுவார்கள் என்று கூறி நிர்வாகிகளை பீதி கிளப்பிவிட்டு சென்றுள்ளார் நட்டா.
 

click me!