உயிர் போகும் அளவிற்குக் கொடுமையான சித்ரவதை... மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம்.. கொதிக்கும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Nov 7, 2020, 3:09 PM IST
Highlights

அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம் போல் மறைத்து - தமிழகக் காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம் போல் மறைத்து - தமிழகக் காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர், நெய்வேலி நகரக் காவல் நிலையப் போலீசாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம்  காவல் நிலைய இரட்டைக் கொலைக்குப் பிறகு - உயர்நீதிமன்றமே எச்சரித்தும் - தமிழகக் காவல் துறைத் தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும் - இதுபோன்ற போலீஸ் ‘டார்ச்சரும்’ , அதனால் ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகக் காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஆதாரங்களாக ஒரு சில காவல் நிலையங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. கடலூர் செல்வமுருகன் மரணத்தைப் பொறுத்தமட்டில், “உன் கணவர் மீது, ஸ்டேஷனில் உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்” என்று எச்சரிக்கப்பட்டதும் - “கணவனைக் காணவில்லை” என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை வாங்காமல் வடலூர், நெய்வேலி நகரக் காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இதயமற்ற முறையில் அலைக்கழித்ததும் - மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மீறும் செயல்களாகும். 

ஒருவர் புகார் கொடுத்தால் - காவல் நிலைய எல்லை குறித்துக் கவலைப்படாமல் - அப்புகாரினைப் பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை  எச்சரித்தும் - ஒரு சில காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்பது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்குள் புகுந்து விட்ட  “கருப்பு ஆடுகளின் ஆதிக்கத்தை” வெளிப்படுத்துகிறது! கடலூர் செல்வமுருகன் வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மையான வழக்கிற்காகவா? அல்லது சாத்தான்குளம் காவல் நிலையம் போல் பொய்ப் புகாரிலா? விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட செல்வமுருகன் ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்? 

அப்படித் தாக்கிய போலீசார் யார் யார்? சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக செல்வமுருகனின் உயிர் போகும் அளவிற்குக் கொடுமையாகச் சித்ரவதைக்கு உள்ளாக்கி, இந்த மரணத்திற்குக் காரணமானவர்கள் ஏன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை? போலீஸ் கஸ்டடியில் மரணம் என்பதை மறைக்க - காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி? - அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து எல்லாம் தீவிரமாக விசாரித்து, அவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம் போல் மறைத்து - தமிழகக் காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என்றும்  முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

click me!