
உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு மட்டும் தான் வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதி கொடுத்து இருக்கிறோம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்தியஅரசு கொடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
கடன் தள்ளுபடி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில், அவர்களின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்பு ஒரு மாநில விவசாயிகளுக்கு மட்டுமே இருக்கக்கூடாது, நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் நடக்கின்றன, அதைத்தடுக்க இந்த அறிவிப்பை பரவலாக்க வேண்டும் என்று பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
பேட்டி
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து ஐதராபாத்தில் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
உ.பி. விவசாயிகளுக்காக
அப்போது அவர் கூறுகையில், “ உத்தரப்பிரதேசத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வேளாண் கடன் தள்ளுபடித் திட்டம் உறுதியளிக்கப்பட்டது. அங்கு அரசு அமைந்தவுடன் உறுதியாக அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மற்ற மாநிலத்துக்கு இல்லை
இந்த வாக்குறுதி என்பது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடையாது. அரசின் தேசியக் கொள்கையும் இல்லை. இது குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் செயல்படுத்தும் வாக்குறுதியாகும். விவசாயக் கடன் தள்ளுபடி என்பது, அந்தந்த மாநிலங்களின் வளங்கள், நிதிவசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அரசு அறிவிக்கலாம். அவர்கள் சொந்தமாக முடிவு எடுக்க அனைத்து சுதந்திரமும் உண்டு.
பாகுபாடு இல்லை
மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது என்பது கூறுவது தவறு. இதில் தென் மாநிலங்கள், வடமாநிலங்கள் என்ற உள்நோக்கு விசயம் இருக்கிறது என்று கூறமுடியாது'' எனத் தெரிவித்தார்.
தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு
தெலங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் நிறுவனரான பவன் கல்யான் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு மட்டும் மத்திய அரசு வேளாண் கடன் தள்ளுபடி உறுதி அளித்துள்ளது.இது வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் என பிரிக்கும் முயற்சியாகும் என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.