'தளபதி தலைமை.. தொடரட்டும் வெற்றி'..! உள்ளாட்சி முடிவுகளால் குஷியான வைகோ..!

By Manikandan S R SFirst Published Jan 4, 2020, 2:57 PM IST
Highlights

மலையளவு குவிக்கப்பட்ட வெள்ளிக் காசுகள் அள்ளி வீசப்பட்டன, ஆனால் இவை அனைத்தையும் எதிர்கொண்டு, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் அதிமுக அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி அடுத்து வர இருக்கும் தேர்தல்களிலும் தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.இ.அ.தி.மு.க. அரசு மூன்று ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்தது. உச்சநீதிமன்றம் எடப்பாடி அரசின் தலையில் குட்டு வைத்த பின்னரே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. உள்ளாட்சித் தேர்தலை முழுமையாகவும் நடத்தாமல், இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உள்ளாட்சிகளைப் பிரித்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. மாநிலத் தேர்தல் ஆணையம் சுயேட்சையாக இயங்க முடியாத அளவுக்கு எடப்பாடி அரசு பல நெருக்கடிகளைத் தந்தது. வார்டு வரையறைகள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவற்றில் திட்டமிட்டே அ.இ.அ.தி.மு.க. அரசு குழப்பங்களை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சியினரின் அடாவடிகள், அதிகார அத்துமீறல்கள், அரசு இயந்திரத்தின் பாரபட்சமான அணுமுறை இவற்றின் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அ.இ.அ.தி.மு.க. அரசு களத்துக்கு வந்து. மலையளவு குவிக்கப்பட்ட வெள்ளிக் காசுகள் அள்ளி வீசப்பட்டன, ஆனால் இவை அனைத்தையும் எதிர்கொண்டு, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எளிய மக்களுக்கும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை வழங்கும் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு முன்வராவிட்டாலும் தமிழ்நாட்டில் மக்கள் சக்தி தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பக்கம் இருக்கிறது என்பதை இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிருபித்திருக்கிறது.

இந்த வெற்றிக்குக் காரணமான தமிழக வாக்காளர்களுக்கு நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமு.க., காங்கிரஸ், மறுமலர்ச்சி தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும், ஒன்பது மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்த மாபெரும் வெற்றி தொடரட்டும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!