எதிர்க்கட்சிகளை அடக்கி விடலாம் என கனவு காணதீங்க..! முதல்வருக்கு எதிராக கொந்தளித்த அழகிரி..!

By Manikandan S R SFirst Published Apr 18, 2020, 1:55 PM IST
Highlights

அ.தி.மு.க. அமைச்சர்களை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாக தான் முடியும். 

நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக விமர்சித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை அடக்கி விடலாம் என்கிற கனவு பகல் கனவாகவே இருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்-அமைச்சர் தனது உரையில் அனைத்து கட்சி கூட்டத்தை எதற்காக கூட்ட வேண்டும்? இவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக அ.தி.மு.க. ஆட்சி மீது நாள்தோறும் குற்றம் குறை கூறி வருகிறார்கள்” என்று ஆத்திரம் பொங்க கூறி இருக்கிறார்.

இந்தியாவிலேயே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல விரைவு சோதனைக் கருவிகள் பெறுவதில் மத்திய அரசு கொள்முதல் செய்த 5 லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு 12 ஆயிரம் சோதனை கருவிகள் தான் வழங்கப்படுகின்றன என முதல்-அமைச்சர் கூறுகிறார்.

நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சோதனைக் கருவிகள் வழங்குவதிலும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சித்து பாரபட்சமாக நடத்துவதை தட்டிக்கேட்க துணிவில்லை? அ.தி.மு.க. அமைச்சர்களை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாக தான் முடியும். அத்தகைய மக்கள் விரோத அணுகுமுறையை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மக்கள் ஆதரவோடு முறியடித்து காட்டும். இவ்வாறு அழகிரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

click me!