பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தமிழ் தவறில்லாமல் எழுதிவிட்டால் ஒரு லட்சம் பரிசு !! டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி சவால் !!

By Selvanayagam PFirst Published Jun 5, 2019, 10:36 AM IST
Highlights

தமிழகத்தில் தமிழ் முறையாக வளர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, டாக்டரேட், என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களோ, தமிழ் பேராசிரியர்களோ தவறில்லாமல் தமிழ் எழுதிவிட்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக தருகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என யாருமே கடந்த 50 ஆண்டுகளில் தமிழை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிக் போடவில்லை என குற்றம்சாட்டினார்.

தமிழகத்துக்குள் பணியாற்ற வேண்டும் என்றால் தமிழ் மட்டும் தெரிந்தால் போதும், இந்திய அளவில் பணியாற்ற வேண்டும் என்றால் ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதே போல் உலக அளவில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க  வேண்டும் என கூறிய கிருஷ்ணசாமி, அதனால் இந்தியாவுக்கு மும்மொழி கொள்கை அவசியம் என்றார்.

அரசியல்வாதிகள் ஹிந்தி வேண்டாம் என்று போராட்டம் நடத்துகிறார்கள், ஆனால் அவர்களது பிள்ளைகளை மட்டும் ஹிந்தி படிக்க வைக்கிறார்கள். உதாரணமாக ஹிந்தியை கடுமையாக எதிர்த்த மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், அவரது பிள்ளையான தயாநிதி மாறனை ஹிந்தி படிக்க வைத்தார் என குற்றம்சாட்டினார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் கொண்டு வந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அதனை எதிர்த்து இங்கு கொண்டு வரவிடாமல் செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு தமிழ் முறையாக வளர்க்கப்படவில்லை என்ற கிருஷ்ணசாமி,  ஒரு பி.ஹெச்டி மாணவரோ, என்ஜினியரிங் கல்லூரி மாணவரோ அல்லது கல்லூரி பேராசிரியரோ தமிழை  ஒரு பிழை கூட இல்லாமல் எழுதிக் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக சவால் விட்டுள்ளார்.
 

click me!