செந்தில் பாலாஜி போல ஒரு தம்பி இருந்தால்.. முதல்வர் ஏன் படைக்கு அஞ்சப்போகிறார்.. மாஸாக பேசிய சத்யராஜ்

By Raghupati RFirst Published Dec 28, 2021, 1:43 PM IST
Highlights

தளபதிக்கெல்லாம் தளபதியாக இருக்கிறார் செந்தில்பாலாஜி என்றும், செந்தில்பாலாஜி தொட்ட தெல்லாம் வெற்றிதான் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

‘ஆற்றல்’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், விவசாயி, துப்புறவு பணியாளர், செவிலியர், வீட்டு வேலை செய்பவர் என 74 தொழில்களின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக 103 வயதில் விவசாய பணி மேற்கொண்டு வரும் கோவை மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு விருதினை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே அவரது காலை தொட்டு வணங்கி நெகிழ்ச்சியூட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘விருது பெற்றவர்கள் நாங்கள் பெரிய ஆள் என காலில் விழுந்தார்கள், நான் அவர்களில் காலில் விழுந்தது சந்தோஷமாக இருந்தது. வயதானவர்களின் காலில் விழுந்தால் தவறில்லை. உங்களுக்கு பொழுதுபோக்கு கொடுத்தாலும் நடிகராகிய எங்கள் காலில் விழுவதற்கான தகுதி எங்களிடம் இல்லை. எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்பார் அமைச்சர் செந்தில்பாலாஜி என அனைவராலும் பாரட்டப்படுகிறார். 

சரியான அமைச்சர்கள், சரியான நிர்வாகிகள் என 1008 பிரச்சனைகளுக்கு நடுவில் பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமோ அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப்போல, செந்தில் பாலாஜி போல ஒரு தம்பி இருந்தால் முதல்வர் ஏன் படைக்கு அஞ்சப்போகிறார் என்று  கூறினார். 

மேலும் பேசிய அவர், ‘தளபதிக்கெல்லாம் தளபதியாக இருக்கிறார் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி தொட்ட தெல்லாம் வெற்றிதான். செந்தில்பாலாஜியின் சுறுசுறுப்பை சாதாரண நிலையில் இருப்பவரும் பாராட்டுகிறார், முதலமைச்சரும் பாராட்டுகிறார், நல்ல உள்ளம் படைத்தவர்கள் நல்ல இடத்தில்இருந்தால் நிச்சயமாக இந்த சமூகத்திற்கு நல்லது நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கலைப்போராளிகளாக இருப்பது எளிது, ஆனால் களப்போராளிகளாக இருப்பது கடினம் என கூறிய சத்யராஜ் தளபதி ஸ்டாலினுக்கு நல்ல தளபதிகளாக கோடிக்கணக்கான தளபதிகள் உறுதுணையாய் இருந்து தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக உருவாக்க வேண்டும். தெலுங்கு நடிகர்களும் பாரட்டும் வகையில் முதல்வர் செயல்பட்டுவருவதாக அப்போது முதல்வருக்கு சத்யராஜ் புகழாரம் சூட்டினார்.

click me!