அப்போதே தனியாகத்தான் இருந்திருக்கிறது கொங்கு நாடு... வானதி சீனிவாசன் தகவலால் பரபரப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 10, 2021, 4:44 PM IST
Highlights

வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.
 

தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்னும் புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க முயற்சிப்பதாக வெளியாகி வரும் தகவலுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் புதிய வழக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் இது தொடர்பாக பாஜக எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசு என அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், இனி அவ்வாறுதான் அழைக்கப்போவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், திமுக மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் அடிக்கடி நடந்து கொண்டே வந்தது.


 
இந்நிலையில், நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட எல்.முருகனின் சுயவிபரப் பக்கத்தில், எல். முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழகத்தின் ஒரு பகுதியை கொங்குநாடு என மத்திய அரசே குறிப்பிட்டிருந்ததால், தமிழகத்தை பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா..? என்ற விவாதம் எழுந்தது.
 
இந்நிலையில், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முகநூல் பதிவில், “கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு, காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.
 
ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

click me!