
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, பன்னீர் அணி என இரண்டு அணிகள் இருந்தன. பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் ஸ்ரீனிவாசனுக்கும் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொது செயலாளராக தினகரனையும் நியமித்துவிட்டு சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா.
அதன் பிறகு, ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியின் துணை பொது செயலாளரான தினகரன் தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்து கொண்டதை அடுத்து, அவருக்கு கட்சி மற்றும் ஆட்சியில் எதிர்ப்பு ஆரம்பித்தது. இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதாகும் சூழ்நிலை உருவானபோதே, அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அமைச்சர்கள் அந்தர் பல்டி அடித்தனர்.
இருந்தாலும், கட்சி மற்றும் ஆட்சியில் தன்னுடைய பிடி தளர்ந்து விட கூடாது என்பதற்காக, சிறையிலிருந்து கொண்டே தமது ஆதரவு எடபடியாருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார் தினகரன். இந்நிலையில், அவர் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து, அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இது எடப்பாடிக்கு மட்டுமல்ல, மன்னார்குடி உறவுகளுக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால், எடப்பாடி மற்றும் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மத்தியில் தினகரனுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து பிரிந்து சென்ற வேளையில், ஆட்சி அமைக்கும் அளவுக்கோ, ஆட்சியை கலைக்கும் அளவுக்கோ அவருக்கு ஆதரவு இல்லை.
ஆனால், தற்போது, கடந்த மூன்றரை மாத ஆட்சியில், எடப்பாடி தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய கொங்கு மண்டல தொழிலதிபர்களும் தயாராக உள்ளனர்.
மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர், தினகரனை மீண்டும் கட்சியிலோ ஆட்சியிலோ கோலோச்ச அனுமதிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். இதுவரை எடப்பாடியின் எதிர்ப்பாளராகவும், தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்த செங்கோட்டையனும், தினகரனின் அரசியல் குறித்து முதல்வர் எடப்பாடி முடிவெடுப்பார் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
மறுபக்கம், தினகரன் அரசியலில் தலை தூக்க ஆரம்பித்தால், அது தமக்கு பெரும் சரிவையும் சிக்கலையும் உருவாக்கும் என்பதால், எடப்பாடியை வைத்துக் கொண்டே காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. ஆனாலும், தினகரனின் ஆதரவாளர்கள் அவரை விடுவதாக இல்லை. தினகரனை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம், சசிகலாவை தவிர யாருக்கும் இல்லை என்று, அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் கூறியுள்ளார்.
இதனால், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதுடன், அவருக்கு எதிராக கொங்கு மண்டலம் ஓரணியில் திரண்டுள்ளது. அதையும் மீறி தினகரன் அடம்பிடித்தால், தமது ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்கமாட்டோம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால், அதிமுக ஆட்சிக்கு தினகரன் வடிவில் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.