
காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 2007-ம் ஆண்டு வந்தது. அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வறிக்கைக்காக நீதிமன்றம் காத்திருக்கிறது.
அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதை ஆய்வு செய்து பின்னர் உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில், காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பான மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் அனுமதி கோரினர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அதனால், புதிய வழக்குகள் எதையும் தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் அனுமதி மறுப்பு தமிழகத்திற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.