கருணாநிதி ஃபேமிலியின் பர்ஷனல் டைரி இப்போது எடப்பாடியாரின் கையில்: திகைப்பில் திணறும் ஸ்டாலின், அ.தி.மு.க.வின் ‘அலேக்’ ஐடியா

By Vishnu PriyaFirst Published Sep 6, 2019, 5:24 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த நித்யா, அதிமுகவில் இணைய இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆடி போயிருக்கிறாராம் ஸ்டாலின்.

கோபாலபுரம் வீட்டில் தனது அறையில் சில வருடங்களுக்கு முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கருணாநிதி. தீடீரென துரைமுருகனை பார்த்து, ’யோவ் எங்க அம்மாவை கூப்பிடுய்யா!’ என்றார். துரை திகைத்து ‘தலைவரே அம்மாவையா? அவங்கதான் இறந்து போயி பல வருஷமாச்சே!...’ என்று இழுத்தார். உடனே கருணாநிதி ‘நான் நித்யாவை சொன்னேன்  யா. இப்ப எனக்கு எல்லாமே அவன் தானே. ஒரு அம்மா பண்ணுற காரியத்தைத்தானே எனக்கு அவன் பண்ணிட்டு இருக்கான்!’ என்றார். துரை முருகன் கண் கலங்கிப்போய் நித்யாவை கூப்பிட்டார் உடைந்த குரலில். 

நித்யாவை உங்களுக்கு தெரியுமா? சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தன்  எனும் இளைஞன். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். கருணாநிதியின் உடல் நிலை தளர்ந்து, அவரால் நடக்க முடியாமலும், தானே தனது பணிகளைப் பார்க்க முடியாமலும் போன போது, அவருக்கு உதவி புரிய ஒரு இளைஞர் தேவைப்பட்டார். சென்னையை சேர்ந்த தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர்தான் நித்யானந்தனை கோபாலபுரத்தில் கொண்டு வந்து சேர்த்தார். எப்போதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது பெரும் அக்கறையும், அன்பும் கொண்ட கருணாநிதி நித்யானந்தனை தனது உதவியாளாக்கிக் கொண்டார் உடனடியாக. அவரேதான் ‘நித்யா’ என்று கரகர குரலில் சுருக்கிப் பெயர் வைத்தார். அன்று முதல் கருணாநிதியின் நிழலாக ஆகிப்போனார் நித்யா. கருணாநிதிக்கு எல்லாமுமாகிப் போனார் விரைவில். ஒரு குழந்தையைப் போல் அந்த மூத்த தலைவரை பார்த்துக் கொண்டார். முகம் சுளிக்காமல் பணிவிடைகளை செய்தார். 

நித்யாவின் சேவையில் கோபாலபுர குடும்பம் செம நிம்மதியாக இருந்தது. அந்த வீட்டில் ஒவ்வொரு இன்ச்சுமே நித்யாவுக்கு அத்துப்படியானது. கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அக்குடும்பத்தினர் அத்தனை பேரின் குணம், கோபதாபம், மகிழ்ச்சி, அரசியல், வெற்றி, தோல்வி, சம்பாத்தியம், கண்ணீர் என எல்லாவற்றையும் அறிந்த பர்ஷனல் டைரியாகவே ஆகிப் போனார் நித்யா. 

கருணாநிதி  மறைந்து, அவர் அடக்கம் செய்யப்பட்ட அன்று இரவில் அந்த சமாதியின் அருகிலேயே கண்ணீர் பெருக நித்யா கிடந்ததை கண்டு கருணாநிதியின் ஆன்மா அழுதிருக்கும் நிச்சயம். 
இப்படியான நித்யாவை, கருணாநிதிக்குப் பின் தி.மு.க. கண்டு கொள்வதேயில்லையாம். கருணாநிதியின் நினைவு நாள் மற்றும அவரது நினைவலைகள் என எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுகிறாராம் நித்யா. ஸ்டாலினிடம் தனது தேவைகள், பிரச்னைகள், ஆதங்கங்களை கொட்டலாம் என நித்யா நினைத்தால் அவரை ஸ்டாலினிடம் நெருங்கவிடாமல் சில சக்திகள் தடுக்கின்றனவாம். ஒரு காலத்தில் நித்யாவிடம் கேட்டுத்தான் கருணாநிதியின் உடல் நிலை, அவர் முழித்திருக்கிறாரா இல்லையா என்பதை ஸ்டாலினே அறிந்து கொண்டார். இன்றோ அந்த ஸ்டாலினிடம் ஒரு வார்த்தை பேச நித்யாவால் முடியவில்லையாம். 

இந்த நிலையில் மனம் வெறுத்துப் போன நித்யா,  சமீபத்தில் தன் சொந்த மண்ணான பல்லாவரத்தில் நடந்த ஒரு கோயில் விழாவில் பேசிய நித்யா ‘நம் இனம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. நாம் அதிகாரத்துக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.’ என்று பேசியிருக்கிறார். இது ஸ்டாலினின் கவனத்துக்குப் போக, அவர் விசாரிக்க, நித்யா இதை தானாக பேசவில்லை, அவர் பின்னால் அ.தி.மு.க. இருக்கிறது என்பது புலனாகி இருக்கிறது. 

ஆம் வேதனையில் இருந்த நித்யாவை சமீபத்தில் அ.தி.மு.க.வினர் சந்தித்துப் பேசி அவரது மனதை கரைத்து தங்கள் கட்சி பக்கம் சாய்த்திருக்கின்றனர். எடப்பாடியாரிடம் இந்த தகவல் பகிரப்பட்டதாம். உடனே அவர்  பக்காவாய் ஸ்கெட்ச் போட்டு, நித்யாவுக்கு ஒரு பெரிய ஆஃபரை தருவதாக உறுதி கொடுக்க சொல்லி, அவரை தங்கள் இயக்கத்துக்கு முழுமையாக பயன்படுத்திக்க சொல்லி திட்டமிட்டிருக்கிறார்.

கூடிய விரைவில் நித்யாவை தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்து, அவருக்கு ஒரு பொறுப்பை வழங்கி, கழக மேடைகளில் தி.மு.க.வை போட்டு வறுக்கச் சொல்லி வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளாராம். கருணாநிதியை டேமேஜ் செய்யாமல் பேசப்போகும் நித்யா, மீத நபர்களான ஸ்டாலின் முதல் உதயநிதி வரை அத்தனை பேரின் பர்ஷனல் விஷயங்களையும் மக்களிடம் போட்டுடைத்து, ‘கருணாநிதியை தாய் போல் பராமரித்த என்னை வீதியில் விட்டுட்ட இந்த குடும்பத்துக்கா உங்கள் ஓட்டு?’ எனும் ரீதியில் கண்ணீரோடு கேட்க வைக்க இருக்கிறாராம். 
இந்த தகவலெல்லாம் ஸ்டாலினின் கவனத்துக்கு வர, தங்கள் குடும்பத்தின் பர்ஷனல் டைரியான நித்யாவை எப்படியாவது மீண்டும் தங்களின் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ள படாதபாடு படுகிறாராம். 

இந்த விவகாரம் பற்றி தன்னிடம் கேட்கும் பத்திரிக்கையாளர்களிடம் ‘நான் உயிருள்ளவரை தி.மு.க.வில்தான் இருப்பேன். தலைவர் ஸ்டாலினை எப்போது நினைத்தாலும் நேரடியாக சென்று சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் வருத்தத்தில் இருப்பது உண்மையே.’ என்றிருக்கிறார். 
சரியாப் போச்சு! 

click me!