
நான் கருணாநிதியின் மகன், சொன்னதைச் செய்வேன் என அழகிரி சவால் விடுத்துள்ளார். சென்னையில் 5-ம் தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பர் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 7-ம் தேதி மறைந்தார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும் என அழகிரி மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவரை மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ள முடியாது என்று திமுக சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் உடன் பிறப்புகள் தன்னுடன் இருப்பதாக கூறிய அழகிரி செப்டம்பர் மாதம் 5-ம் தேதி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரளுவார்கள் என மு.க. அழகிரி தெரிவித்தார்.
இதற்காக ஒரு லட்சம் வரை ஆட்களை திரட்டும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 10-வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இணைவதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்க தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என அழகிரி பல்டி அடித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என பதில் அளித்தார். இந்த அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பர்கள் என்றார். அதை தொடர்ந்து ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் அழைப்பு வரவில்லையே என்ற கேள்விக்கு, கருத்து கூற விரும்பவில்லை என அழகிரி மழுப்பலான பதிலை தெரிவித்தார்.