திருவாரூருக்கே கருணாநிதி பெயர் வைக்கலாம்.. அதை கேட்க அண்ணாமலை யார்.? தெறிக்கவிட்ட ஆர்.எஸ். பாரதி!

By Asianet TamilFirst Published May 15, 2022, 9:08 PM IST
Highlights

தமிழகத்தில் அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சி. நாங்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால், பாஜக எங்கள் பகையாளி கட்சி. ஒரு போதும் திமுக - பாஜகவுடன் சேராது.

திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கலைஞர் பெயர் வைக்கலாம் என்று அதைக் கேட்க அண்ணாமலை யார்? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க இருக்கிற நேரம் போதாது. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழக அரசின் கடன் ஐந்தே முக்கால் லட்சம் கோடி.‌ ஆனால் அவரது நிர்வாகத் திறமையால் கடனை சமாளித்து, மக்களுக்கு தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சியைப் பாராட்டி வட மாநில ஊடகங்கள் பேசுகின்றன. ஸ்டாலின் முதல்வராக ஆனதும் எதிர்கட்சிகளை ஸ்டாலின் பழிவாங்குவார் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் பழிவாங்கப்படவில்லை.‌

 

ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக நடத்தியது ஸ்டாலின்தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பி.எஸ்ஸும்தான் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்றனர்.‌ அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் ஸ்டாலினை அங்கிருந்த பெண்கள் ஒரு சகோதரனைப் போல பார்த்தனர். தமிழகத்தில் அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சி. நாங்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால், பாஜக எங்கள் பகையாளி கட்சி. ஒரு போதும் திமுக - பாஜகவுடன் சேராது. 1996 - ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக  ஓ.பி.எஸ்ஸுக்கு முதன் முதலில் மாநில அளவில் அரசியலில் பதவி வழங்கியது நான்தான். அதைத் தொடர்ந்துதான் ஜெயலலிதாவால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.‌‘ஓ.பி‌.எஸ்-ஸை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கு முன் தேர்ந்தெடுத்த எனக்கு அவர் நன்றி கூற வேண்டும். 

திருவாரூர் வீதியில் கலைஞர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அண்ணாமலை யார்? திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கலைஞர் பெயரை வைக்கலாம். அண்ணாமலை  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, முருகன் அல்ல, மோடியே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. இங்கு திமுக - அதிமுகவுக்கும் எப்போதும் சண்டை இருக்கும். அதை வைத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் திமுக நிறைவேற்றி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் வழங்கவில்லை என 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக கேட்க தகுதி கிடையாது.‌ அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக திமுக எப்போதுமே இருக்கும்.” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
 

click me!