அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை…. மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி…. கொந்தளித்த கார்த்தி சிதம்பரம் !

By Selvanayagam PFirst Published Aug 21, 2019, 10:51 PM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு கைது செய்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வழக்கறிஞர்கள்  அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர். ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காரில் அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. 2008 ல் சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இது சம்பந்தமாக 20 முறை எனக்கு சம்மன் அனுப்பினர்.

சி.பி.ஐ., விருந்தாளியாக உள்ளேன். ஐ.என்.எக்ஸ் . வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. கடந்த ஆண்டு என்னை பாடாய் படுத்தினர். யாரையோ திருப்திபடுத்தவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்போம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

click me!