
தமிழக அரசுக்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அது நிச்சயம் ஜெயிக்கும் என்று டி.டிவி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவின் தீவிர முயற்சியால் இன்று அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன. மேலும் அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது குறித்து பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என வைத்திலிங்கம் எம்.பி.தெரிவித்தார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ன் இந்த நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், கடுமையாக பேசி வருகின்றனர். கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் இறங்கிவிட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஜெயலலிதாவுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டதாக குமுறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு மீது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார். அப்படி அவர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் நிச்சயம் அது ஜெயிக்கும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.