பெண்களை ஆயுதம் ஏந்த வச்சுடாதீங்க.. கனிமொழி பகிரங்க எச்சரிக்கை

First Published Mar 10, 2018, 4:44 PM IST
Highlights
kanimozhi got angry about harassment and attacks against women


தங்கள் பாதுகாப்புக்காக பெண்களை ஆயுதம் ஏந்த வேண்டிய சூழலை உருவாக்கிவிடாதீர்கள் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை வயது வித்தியாசமின்றி பாலியல் வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

தமிழகத்தை அமைதிப்பூங்கா என ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாக கூறுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அறியப்படும் சென்னையில், நேற்று பட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார். இதுதான் பாதுகாப்பா என்ற கேள்வி எழுகிறது.

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீஸார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது.

கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை. வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள், ஆட்சியாளர்களே என்று கனிமொழி எச்சரித்துள்ளார்.
 

click me!