அடேங்கப்பா, 500 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம்... 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகும் கமல் கட்சி!

By Asianet TamilFirst Published Aug 24, 2019, 7:31 AM IST
Highlights

நவம்பவர் 7-ம் தேதி கமல் ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. அன்று முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 500 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் கமல ஹாசன் நடத்திவரும் மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. கட்சியின் பெரிய அளவில் கட்டமைப்புகள் எதுவும் இல்லாமல் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதால், கமலுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் மநீமவுக்கு 4 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.


இந்நிலையில் கட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் ஒன்றியம். வார்டுகள் அளவில் நிர்வாகிகளை நியமிக்க மக்கள் நீதி மய்யம் முடிடு செய்துள்ளது. இதுபற்றி ஆலோசனை கூட்டம் சென்னை, திருவள்ளூர் பகுதியினருக்காக நடைபெற்றது. துணை  தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மநீம நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசும்போது, தேர்தல் பிரசாரத்தை 500 நாட்கள் செய்ய இருப்பதாக அக்கட்சியின்  துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.

 
 “மக்கள் நீதி மய்யம் 'ஆபரேஷன் 500' என்ற திட்டத்தை வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அந்தப் பெயரை நாம் வைக்கவில்லை. இருந்தாலும், 500 நாட்களுக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலை திட்டமிட்டு, 500 நாட்களுக்கு முன்பாகத் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளோம். நவம்பர் முதல் இந்தத் தேர்தல் பிரசாரம் தொடங்கும். அதற்காக கட்சியைத் தயார்படுத்தவே, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள்.

 
அதற்கு இடையே உள்ளாட்சி தேர்தலோ, இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலோ வந்தால், அதில் போட்டியிடுவது குறித்து யோசித்து முடிவெடுப்போம்.  நம்முடைய நோக்கம், 2021 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமே. அந்தத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.” என்று மகேந்திரன் பேசினார்.

 
 நவம்பவர் 7-ம் தேதி கமல் ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. அன்று முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் தெரிவித்தன.

click me!