
கமல்ஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்னையிலிருந்து தனி விமானத்தில் சென்றார். அதன் பின் கோவையில் தங்கியிருந்த அவர் பல ஊர்களின் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கினார். அப்போது அவரிடம் இவ்வளவு பணம் ஏது? என்று கேட்டபோது ‘சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி இவற்றில் உழைத்து நான் சேர்த்திருக்கும் என் பணம். மற்றவர்களைப் போல் எங்கிருந்தோ வரும் பணத்தில் வசதியாக சுற்றவில்லை.’ என்றார்.
அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றியை தொடாமல் தோற்றது மக்கள் நீதி மய்யம். அவரே கூட கோயமுத்தூரில் வானதி சீனிவாசனிடம் தோற்றார். ஆனாலும் அதன் பின் இயல்பு நிலைக்கு வந்தவர் மீண்டும் தன் சினிமா மற்றும் பிக்பாஸ் பணிகளை துவக்கினார்.
அப்பேர்ப்பட்ட கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் கதர் ஆடைகளை விற்பனை செய்யும் சர்வதேச அளவிலான தொழில் ஒன்றை துவக்கி ஆச்சரியப்படுத்தினார்! ஏற்கனவே தான் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வருபவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய பத்தையும் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனது பழைய ஹிட் மற்றும் மிக சிறந்த பாராட்டுக்களை பெற்ற படங்களை ரீமேக் உரிமை வழங்கி பணம் சம்பாதித்து வருகிறார்.
கமல்ஹாசன் இப்படி திடுதிப்பென வருமான ஈட்டலில் இறங்கியிருப்பது ஏன்? என்று விசாரித்தபோது “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது, அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் வந்துவிடும், இன்னும் இரண்டு வருடங்களில். இதற்கெல்லாம் செலவு செய்ய மிகப்பெரிய தொகை தேவைப்படும் அதற்காகதான் தயாராகி வருகிறார்! என்று தகவல்கள் கிடைத்தன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது கட்சி வேட்பாளர் பட்டியலையும் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாகவே அறிவித்து, மளமளவென தேர்தல் பணிகளிலும் இறங்கினார் கமல். பல மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கான அவரது கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டன.
இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன், தனது கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனையில் அமர்ந்திருக்கிறார். அப்போது ‘வெற்றி வாய்ப்பு நம் வேட்பாளர்களுக்கு எப்படி?’ என்று கேட்டபோது “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மிக கடுமையாக பணத்தை அள்ளி விடுவார்கள், செலவு செய்வார்கள். அதேவேளையில் அதன் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், நம் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் செலவு செய்ய நம் ஆட்களிடம் பணமில்லை. எனவே தலைமை அவர்களுக்கு தேவையான நிதியுதவி செய்தால் பல இடங்களில் வெற்றி நிச்சயம்.’ என்றார்களாம்.
உடனே ஆலோசனையின் போக்கை வேறு திசைக்கு மாற்றிய கமல், கடைசிவரையில் ‘பணம்’ பற்றி பேசவே இல்லையாம். இது போதாதென்று, ‘பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராட பண உதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்’ என்று பொதுமக்களிடம் ஆன்லைன் உண்டியல் ஏந்தி கோரிக்கை வைத்துள்ளார் கமல். நம்மிடம் பேசிய போது இதுபற்றியும் டென்ஷனாகிறார்கள் அவரது கட்சி நிர்வாகிகள். எப்படி தெரியுமா?...
பணம் இருக்கலாம், மனம் இருக்கணுமே! இவ்வளவு சம்பாதித்தும் கூட இப்படி மக்களிடம் வசூல் செய்து கட்சியை நடத்துவது நல்லாவா இருக்கு? என்று.